இந்தியாவுக்கான இலங்கையின் ஏற்றுமதி 12.3% அதிகரிப்பு – இரண்டாவது பெரிய சந்தையாக இந்தியா முன்னேற்றம்!
இலங்கையின் ஏற்றுமதிச் சந்தைகளில் இந்தியா இரண்டாவது பெரிய சந்தையாக முன்னேறியுள்ளது. 2026ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் இந்தியாவுக்கான இலங்கையின் ஏற்றுமதி கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 12.3 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை (EDB) தெரிவித்துள்ளது.
இதன்படி, 2026 ஜனவரி முதல் செப்டெம்பர் வரையிலான காலப்பகுதியில் இந்தியாவுக்கான இலங்கையின் ஏற்றுமதி 889.84 மில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளது. இதன்மூலம், இலங்கையின் ஏற்றுமதிச் சந்தைகளில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியா இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. முன்னதாக இந்த இடத்தில் இருந்த ஐக்கிய இராச்சியம் தற்போது மூன்றாவது இடத்துக்குப் பின்தங்கியுள்ளது.
செப்டெம்பர் மாதத்தில் மட்டும் இந்தியாவுக்கான இலங்கையின் ஏற்றுமதி, கடந்த ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடுகையில் 29.65 சதவீதத்தால் அதிகரித்து 113.22 மில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.
இதேவேளை, 2026ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் ஐக்கிய இராச்சியத்துக்கான இலங்கையின் ஏற்றுமதி 9.33 சதவீதத்தால் குறைந்து 654.36 மில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது. செப்டெம்பர் மாதத்தில் மட்டும் அந்நாட்டுக்கான ஏற்றுமதி 3.17 சதவீதத்தால் குறைந்து 71.71 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அமைந்துள்ளது.
இலங்கையின் மிகப்பெரிய ஏற்றுமதிச் சந்தையாக அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. 2026 ஜனவரி முதல் செப்டெம்பர் வரையிலான காலப்பகுதியில் அமெரிக்காவுக்கான ஏற்றுமதி 2.25 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளது. எனினும், இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 0.05 சதவீதம் என்ற மிகச் சிறிய அதிகரிப்பையே பதிவு செய்துள்ளது.
இதற்கிடையில், 2026ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் இலங்கையின் மொத்த ஏற்றுமதி வருமானம் 13.61 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது. இது 2025ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் பதிவான 12.96 பில்லியன் அமெரிக்க டொலர்களுடன் ஒப்பிடுகையில் 5.04 சதவீத அதிகரிப்பாகும்.
இதில், பொருட்களுக்கான ஏற்றுமதி 5.35 சதவீதத்தால் அதிகரித்து 10.76 பில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது. அதேவேளை, சேவைகள் துறையின் ஏற்றுமதி 3.88 சதவீதத்தால் அதிகரித்து 2.85 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளது.
இலங்கையின் பல்வேறு முக்கிய சர்வதேசச் சந்தைகளில் ஏற்றுமதி வளர்ச்சி பதிவாகியுள்ளமை, ஏற்றுமதிச் சந்தைகளை மேலும் விரிவுபடுத்துவதன் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுவதாக ஏற்றுமதி அபிவிருத்திச் சபை தெரிவித்துள்ளது. அத்துடன், சர்வதேசச் சந்தையில் இலங்கையின் போட்டித்தன்மையை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் சபை வலியுறுத்தியுள்ளது.