இந்தியாவில் இலங்கை இராணுவத்தினருக்கு பயங்கரவாத எதிர்ப்புப் பயிற்சி
இந்தியாவில் நடைபெறும் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் பிணையாளிகள் மீட்புக்கான சிறப்பு பயிற்சிப் படிப்பில் இலங்கை ஆயுதப்படையைச் சேர்ந்த மூன்று அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.
கொழும்பு பாதுகாப்பு அமைப்பின் பிராந்திய பாதுகாப்பு ஒத்துழைப்பு சட்டகத்தின் கீழ், கடந்த செப்டம்பர் 21, 2026 அன்று இப் பயிற்சித் திட்டம் இந்தியாவில் தொடங்கியது.
பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை மற்றும் பிணையாளிகள் மீட்புப் பணிகளின் போது பின்பற்றப்பட வேண்டிய நிலையான நடைமுறைகள், செயல்பாட்டுக் கோட்பாடுகள் மற்றும் சிறந்த உத்திகள் குறித்து அதிகாரிகளுக்குப் பயிற்சி அளிப்பதை முதன்மை நோக்கமாகக் கொண்டு இந்தப் பயிற்சித் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், கொழும்பு பாதுகாப்பு அமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் நாடுகளின் பாதுகாப்புப் படையினரிடையே பரஸ்பர தொழில்முறை அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவும், நிறுவன ரீதியிலான பிணைப்புகளை வலுப்படுத்தவும் இது ஒரு தளமாக அமைந்துள்ளது.
இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் உறுப்பு நாடுகளின் திறனை மேம்படுத்தல், செயல்பாட்டு ஒருங்கிணைப்பு மற்றும் கூட்டுப் பாதுகாப்பை உறுதி செய்தல் ஆகியவற்றுக்காகப் பிராந்திய பாதுகாப்பு அமைப்பினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகவே இந்தப் பயிற்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சமுத்திரப் பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு, எல்லை தாண்டிய குற்றங்களைத் தடுத்தல், இணையவழி பாதுகாப்பு , முக்கிய உள்கட்டமைப்பு பாதுகாப்பு மற்றும் பேரிடர் நிவாரணம் உள்ளிட்ட பிராந்தியப் பாதுகாப்புப் இலக்குகளுக்கு இலங்கை வழங்கி வரும் தொடர்ச்சியான ஆதரவையும் பங்களிப்பையும் இது வெளிப்படுத்துகிறது.
இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் பொதுவான பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்வதையும், அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு இயங்கும் கொழும்பு பாதுகாப்பு அமைப்பில் இந்தியா, இலங்கை, மாலைத்தீவு மற்றும் மொரீஷியஸ் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாகவும், பங்களாதேஷ் மற்றும் சிஷெல்ஸ் ஆகிய நாடுகள் அவதானிப்பாளர்களாகவும் அங்கம் வகிக்கின்றன.