ஆஸ்திரேலிய நாடாளுமன்றில் இசைஞானி இளையராஜாவுக்கு கௌரவம்: சிறப்பு அஞ்சல் தலை வெளியீடு!
இந்தியத் திரையுலகில் அரை நூற்றாண்டு காலமாகத் தனது இசையால் ஆதிக்கம் செலுத்தி வரும் இசைஞானி இளையராஜாவின் 50 ஆண்டு கால சாதனைப் பயணத்தைச் சிறப்பிக்கும் வகையில், ஆஸ்திரேலிய நாடாளுமன்றம் சிறப்பு அஞ்சல் தலை (Postal stamp) ஒன்றை வெளியிட்டு அவரைக் கௌரவித்துள்ளது.
ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் இந்த உயரிய கௌரவத்திற்கு நன்றி தெரிவித்து, இசைஞானி இளையராஜா தனது உத்தியோகபூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் தெரிவித்துள்ளதாவது:
"எனது 50 ஆண்டு கால இசைப் பயணத்தை நினைவுகூரும் வகையில் சிறப்பு அஞ்சல் தலையை வெளியிட்ட விக்டோரியா மாநில அரசாங்கத்தின் நிதியமைச்சர் என்வர் எர்டோகன் (Enver Erdogan MP) உட்பட அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தின் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்த எனக்கு, ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் கிடைத்த இந்த கௌரவம் மிகுந்த நெகிழ்ச்சியை அளிக்கிறது. இந்தத் தருணத்தில் எனது இசைக்கு உயிர்கொடுத்த கோடிக்கணக்கான மக்கள், என்னுடன் பயணித்த சக கலைஞர்கள் மற்றும் தலைமுறை கடந்து எனது பாடல்களை இரசிக்கும் உலகெங்குமுள்ள ரசிகர்களுக்கு எனது நன்றியைச் சமர்ப்பிக்கின்றேன்."
தனது இசைப் பயணத்தின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு, கடந்த ஜூலை மாதம் முதல் உலகின் பல்வேறு நாடுகளில் இசை நிகழ்ச்சிகளை நடாத்தி வரும் இளையராஜா, இதன் தொடர்ச்சியாக வரும் செப்டம்பர் 26-ஆம் திகதி சிட்னியிலும் , அக்டோபர் 5-ஆம் திகதி பிரிஸ்பேனிலும் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சிகளை நடாத்தவுள்ளார்.
இதேவேளை, வரும் 2027-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள 99-வது ஆஸ்கர் விருதுக்கான சிறந்த சர்வதேசத் திரைப்படப் பிரிவில் இந்தியா சார்பில் அதிகாரப்பூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ‘கோந்தல்’ (Kondal) திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜாவே இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.