ஆப்பிள் நிறுவனம் மீது வழக்குத் தொடர்ந்தது OpenAI – வர்த்தக இரகசியங்களைத் திருடியதாகக் குற்றச்சாட்டு!
உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களான ஆப்பிள் மற்றும் OpenAI இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், வர்த்தக இரகசியங்களைத் திருடியதாகவும், வன்பொருள் உற்பத்தியாளர்களுடனான தனது தொடர்புகளுக்குத் தடைகளை ஏற்படுத்தியதாகவும் குற்றஞ்சாட்டி ஆப்பிள் நிறுவனத்துக்கு எதிராக OpenAI வழக்குத் தொடர்ந்துள்ளது.
ஆப்பிள் நிறுவனம், தனது ஊழியர்களைத் தங்களது தொழில்நுட்பத் தகவல்களைப் பெறும் நோக்கில் OpenAI நிறுவனம் பணியமர்த்தியதாகக் குற்றஞ்சாட்டி ஏற்கனவே வழக்குத் தொடர்ந்திருந்தது. இதற்குப் பதிலடியாக, கடந்த வெள்ளிக்கிழமை கலிபோர்னியாவின் மத்திய நீதிமன்றத்தில் OpenAI இந்த எதிர்வழக்கைத் தாக்கல் செய்துள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் பணியமர்த்தல் நடைமுறைகள், ஊழியர்களைத் தனது நிறுவனத்திலேயே தக்கவைத்துக்கொள்வதுடன், போட்டி நிறுவனங்களின் தொழில்நுட்பத் துறைகளில் அவர்கள் பணியாற்றுவதைத் தடுக்கும் வகையில் அமைந்துள்ளதாக OpenAI தனது மனுவில் குறிப்பிட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய தனிப்பட்ட மின்னணு சாதனங்களை OpenAI உருவாக்கி வருவதாகவும், இவை ஆப்பிள் நிறுவனம் தனது ஆதிக்கப் பகுதியாகக் கருதும் சந்தையிலேயே அதற்குப் போட்டியாக அமையக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், OpenAI நிறுவனத்தில் ஆறு மாதங்கள் பணியாற்றிய முன்னாள் ஊழியர் ஒருவரை மீண்டும் பணியில் இணைத்துக்கொண்டதன் மூலம் ஆப்பிள் நிறுவனம் இரகசியத் தகவல்களைப் பெற்றுள்ளதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
குறித்த ஊழியர், OpenAI நிறுவனத்தில் பணியாற்றிய காலத்தில் புதிய சாதனம் தொடர்பான முக்கியத் தகவல்கள் மற்றும் எதிர்கால வன்பொருள் தயாரிப்புகளுக்கான நிறுவனத்தின் திட்டவரைபடம் உள்ளிட்டவற்றை அணுகியிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆவணங்களைத் திருடுவதற்காகவே அந்த ஊழியர் ஆரம்பத்தில் OpenAI நிறுவனத்தில் இணைந்திருக்கக்கூடும் எனத் தற்போது சந்தேகம் எழுந்துள்ளதாகவும் அந்நிறுவனம் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவை கருத்துக் கேட்டபோதும், ஆப்பிள் மற்றும் OpenAI நிறுவனங்கள் உடனடியாகப் பதிலளிக்கவில்லை.
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத் தயாரிப்புகளை உருவாக்குவதில் இரு நிறுவனங்களுக்கும் இடையே போட்டி அதிகரித்துள்ளதுடன், திறமையான ஊழியர்களைப் பணியமர்த்துதல் மற்றும் தொழில்நுட்ப இரகசியங்களைப் பாதுகாத்தல் ஆகிய விடயங்களிலும் மோதல் வலுத்துள்ளது.
கடந்த ஜூலை மாதம், தனது வர்த்தக இரகசியங்களை முறைகேடாகப் பயன்படுத்தி நுகர்வோருக்கான வன்பொருள் தயாரிப்புத் துறையில் நுழைய OpenAI முயற்சிப்பதாகக் குற்றஞ்சாட்டி, அந்த நிறுவனம் மற்றும் அதன் முன்னாள் ஊழியர்கள் இருவருக்கு எதிராக ஆப்பிள் வழக்குத் தொடர்ந்திருந்தது. எனினும், அந்தக் குற்றச்சாட்டுகளை OpenAI மறுத்திருந்தது.
பாரம்பரிய செயலிகள் (Apps) அல்லது இயங்குதளங்கள் (Operating Systems) இல்லாமலேயே செயற்படக்கூடிய எதிர்கால செயற்கை நுண்ணறிவு சாதனங்களின் சந்தையில் யார் ஆதிக்கம் செலுத்தப்போகிறார்கள் என்ற போட்டியாகவும் இந்த வழக்குகள் பார்க்கப்படுகின்றன.
OpenAI வெற்றிகரமான சாதனமொன்றை அறிமுகப்படுத்தினால், ஆப்பிளின் அதிக விற்பனையாகும் ஐபோன் மீதான நுகர்வோரின் கவனம் குறையக்கூடும் எனக் கருதப்படுகிறது. OpenAI நிறுவனம் தனக்கென ஒரு கையடக்கத் தொலைபேசி அல்லது வேறு வகையான மின்னணு சாதனத்தை உருவாக்கி வருவதாக ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
இதற்கிடையில், ஆப்பிள் நிறுவன ஊழியர்கள் தங்களது தனிப்பட்ட ஆப்பிள் சாதனங்கள் மற்றும் கணக்குகளைப் பயன்படுத்தி அலுவலகப் பணிகளை மேற்கொள்ள ஊக்குவிக்கப்படுவதாகவும், பின்னர் வேறு நிறுவனங்களுக்குச் செல்லும்போது தனிப்பட்ட மற்றும் அலுவலகக் கணக்குகளை முறையாகப் பிரிப்பதற்கு ஆப்பிள் அனுமதிப்பதில்லை என்றும் OpenAI குற்றஞ்சாட்டியுள்ளது.
மேலும், ஊழியர்கள் நிறுவனத்தை விட்டு வெளியேறிய பின்னரும் அவர்களது தனிப்பட்ட சாதனங்கள் மற்றும் கணக்குகளை ஆப்பிள் தொடர்ந்து அணுகுவதாகவும், இதன் மூலம் போட்டி நிறுவனங்களுக்குச் செல்லும் ஊழியர்களைக் கண்காணித்து அவர்களின் நகர்வுகளுக்குத் தடைகளை ஏற்படுத்துவதாகவும் OpenAI தெரிவித்துள்ளது.
இதுவரை ஆப்பிள் நிறுவனத்திலிருந்து சுமார் 400 ஊழியர்கள் OpenAI நிறுவனத்தில் இணைந்துள்ளதாகவும், மேலும் பல ஊழியர்கள் பிற தொழில்நுட்ப நிறுவனங்களுக்குச் செல்வதைத் தடுக்கும் நோக்கில் ஆப்பிள் இத்தகைய நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் OpenAI தனது மனுவில் குற்றஞ்சாட்டியுள்ளது.