ஆசியப் பயணத்தை ஆரம்பித்தார் டொனால்ட் ட்ரம்ப் – பிலிப்பைன்ஸில் பொருளாதார ஒப்பந்தங்கள், நட்பு நாடுகளுடன் பேச்சுவார்த்தை
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது ஆசியப் பயணத்தின் முதல் கட்டமாக இன்று (17) பிலிப்பைன்ஸைச் சென்றடைந்துள்ளார்.
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவைச் சென்றடைந்த அவர், பிராந்திய நாடுகளின் தலைவர்களைச் சந்திப்பதுடன், வர்த்தக ஒப்பந்தங்கள் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடவுள்ளார்.
மூன்று நாட்கள் நீடிக்கும் இந்த ஆசியப் பயணத்தின் அடுத்த கட்டமாக ட்ரம்ப் சீனாவுக்குச் செல்லவுள்ளார். அங்கு சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் அணுசக்தி விவகாரம் தொடர்பான முத்தரப்புப் பேச்சுவார்த்தையில் பங்கேற்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னைச் சந்திப்பதற்கான வாய்ப்பும் இருப்பதாக ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் அவரது குடியரசுக் கட்சி குறிப்பிடத்தக்க பின்னடைவைச் சந்தித்த பின்னர், ட்ரம்ப் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.
இதற்கிடையில், அமெரிக்காவில் விமானப் போக்குவரத்துத் துறையில் ஏற்பட்ட பாதிப்புகள், மைக்ரோசொஃப்ட் சேவைகளில் ஏற்பட்ட தடங்கல்கள் மற்றும் ஜேபி மோர்கன் சேஸ் வங்கியின் இணையவழிச் சேவைகளில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு ட்ரம்ப் பதிலளித்துள்ளார்.
இந்தப் பிரச்சினைகளால் பெருமளவிலான விமானப் பயணங்கள் இரத்துச் செய்யப்பட்டதுடன், பல்வேறு பணிகளும் பாதிக்கப்பட்டன. எனினும், இத்தகைய சம்பவங்கள் பெரிய நிறுவனங்களில் இடம்பெறுவது இயல்பானது எனக் குறிப்பிட்ட ட்ரம்ப், அவற்றைத் தாம் பெரிதாகக் கருதவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, வாஷிங்டனை இலக்காகக் கொண்டு கதிரியக்க மாசுபாட்டை ஏற்படுத்தக்கூடிய குண்டு அல்லது இரசாயன ஆயுதத் தாக்குதலை நடத்த ஈரான் திட்டமிட்டு வருவதாக வெளியான செய்தி குறித்தும் அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்குப் பதிலளித்த ட்ரம்ப், அவ்வாறான தாக்குதல் இடம்பெற்றால் இதுவரை எந்தவொரு நாடும் எதிர்கொள்ளாத அளவிலான கடுமையான விளைவுகளை ஈரான் சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளார்.
ஆசியான் மாநாட்டில் கௌரவ விருந்தினராக ட்ரம்ப்
பிலிப்பைன்ஸில் நடைபெறும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பான ஆசியானின் வருடாந்த மாநாட்டில், ட்ரம்ப் கௌரவ விருந்தினராகப் பங்கேற்கவுள்ளார்.
இதனை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை இரவு உலகத் தலைவர்கள் பங்கேற்கும் சிறப்பு விருந்துபசார நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மணிலாவைச் சென்றடைந்த பின்னர், அமெரிக்கா, அவுஸ்திரேலியா, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய குவாட் (QUAD) அமைப்பின் தலைவர்களையும் ட்ரம்ப் சந்தித்துள்ளார்.
கடந்த ஆண்டு வெள்ளை மாளிகைக்குத் திரும்பிய பின்னர், குவாட் தலைவர்களுடன் அவர் பங்கேற்கும் முதல் சந்திப்பு இதுவாகும்.
இந்தச் சந்திப்பின்போது, கடல்சார் கண்காணிப்பு விமானங்களை உள்ளடக்கிய கூட்டுப் பயிற்சியை நடத்துவதற்கும், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்கான புதிய திட்டமொன்றை ஆரம்பிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
தாய்லாந்துடன் வர்த்தக ஒப்பந்தம்
இந்தப் பயணத்தின்போது தாய்லாந்துடன் புதிய வர்த்தக ஒப்பந்தமொன்றிலும் ட்ரம்ப் கைச்சாத்திடவுள்ளார்.
கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட வர்த்தகக் கட்டமைப்பின் கீழ், அமெரிக்கப் பொருட்கள் மீதான பெரும்பாலான இறக்குமதி வரிகளை நீக்குவதற்கும், அமெரிக்க வாகனங்கள், உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கான தடைகளைக் குறைப்பதற்கும் தாய்லாந்து இணக்கம் தெரிவித்திருந்தது.
மேலும், 18 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான பெறுமதியில் அமெரிக்க விமானங்களைக் கொள்வனவு செய்வதுடன், அமெரிக்க விவசாயப் பொருட்கள் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவையும் இறக்குமதி செய்யத் தாய்லாந்து திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், தாய்லாந்துப் பொருட்களுக்கு ட்ரம்ப் விதித்திருந்த 19 சதவீத இறக்குமதி வரியை அமெரிக்க உச்ச நீதிமன்றம் கடந்த பெப்ரவரி மாதம் இரத்துச் செய்திருந்தது. அதனைத் தொடர்ந்து, கட்டாயத் தொழிலாளர் முறையைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்ற காரணத்தைக் குறிப்பிட்டு, கடந்த ஜூலை மாதம் தாய்லாந்துப் பொருட்களுக்கு 12.5 சதவீத வரியை அமெரிக்க நிர்வாகம் விதித்திருந்தது.
தென் சீனக் கடல் விவகாரம் குறித்தும் பேச்சுவார்த்தை
ஆசியான் தலைவர்களுடன் நடைபெறவுள்ள விசேட உச்சி மாநாட்டில், வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடர்பாகவும், பிராந்தியத்தில் நிலவும் மோதல்கள் குறித்தும் கலந்துரையாடப்படவுள்ளது.
குறிப்பாக, மியன்மாரில் பல ஆண்டுகளாகத் தொடரும் வன்முறைகள் மற்றும் தென் சீனக் கடலில் அதிகரித்து வரும் பதற்றங்கள் குறித்து முக்கிய கவனம் செலுத்தப்படவுள்ளது.
தென் சீனக் கடற்பரப்பின் பெரும்பகுதிக்குச் சீனா உரிமை கோரி வரும் நிலையில், அங்கு சீன மற்றும் பிலிப்பைன்ஸ் கடற்படை, கரையோரப் பாதுகாப்புப் படைகளுக்கு இடையிலான மோதல்கள் அண்மைய ஆண்டுகளில் அதிகரித்துள்ளன.
எனினும், தென் சீனக் கடல் மீதான சீனாவின் விரிவான உரிமைக் கோரிக்கையை அமெரிக்கா நிராகரித்துள்ளது.
அத்துடன், பிலிப்பைன்ஸ் படைகள் மீது ஆயுதத் தாக்குதல் நடத்தப்பட்டால், அந்நாட்டைப் பாதுகாக்க அமெரிக்கா கடமைப்பட்டுள்ளதாகவும் வாஷிங்டன் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.