“அடுத்த படம் தமிழில்தான்” – துல்கர் சல்மான் உறுதி!
நடிகர் துல்கர் சல்மான் தனது அடுத்த திரைப்படம் தமிழில் உருவாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.
துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள தெலுங்குத் திரைப்படமான ‘ஆகாசம்லோ ஒக தாரா’ எதிர்வரும் நவம்பர் 20ஆம் திகதி வெளியாகவுள்ளது. இத்திரைப்படத்தின் முன்வெளியீட்டு நிகழ்வு செவ்வாய்க்கிழமை சென்னையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய துல்கர் சல்மான், தனது அடுத்த திரைப்படம் குறித்த தகவலையும் வெளியிட்டார்.
இதன்போது, “எனது அடுத்த திரைப்படம் தமிழில்தான் உருவாகவுள்ளது. ‘கோலி’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை, இயக்குநர் அட்லீயிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய கார்த்திகேயன் வேலப்பன் இயக்கவுள்ளார்” எனத் தெரிவித்தார்.
குறித்த திரைப்படம் தொடர்பான தகவல்கள் கடந்த 2023ஆம் ஆண்டிலேயே வெளியாகியிருந்தன. எனினும், அடுத்தடுத்த தெலுங்குத் திரைப்படங்களில் துல்கர் சல்மான் கவனம் செலுத்தி வந்த நிலையில், தற்போது ‘கோலி’ திரைப்படத்தின் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில், பவன் சதினேனி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ள ‘ஆகாசம்லோ ஒக தாரா’ திரைப்படத்தில் சாத்விகா, ஸ்ருதி ஹாசன், ருஹானி சர்மா, ஸ்வாசிகா மற்றும் கவுதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
கிராமப்புறத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் விண்வெளி வீராங்கனையாக வேண்டும் என்ற தனது கனவை நனவாக்குவதற்கு துல்கர் சல்மான் உதவுவதை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை அமைந்துள்ளது. இத்திரைப்படம் நவம்பர் 20ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
துல்கர் சல்மான் தற்போது ‘ஸ்ரீ ஸ்ரீ’ என்ற தெலுங்குத் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். அவர் இறுதியாக ‘காந்தா’ என்ற தமிழ்த் திரைப்படத்தில் நடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.