அடுத்த ஆண்டு யாழ்ப்பாணத்தில் அறிமுகமாகிறது Metro Bus சேவை!
கொழும்புக்கு வெளியேயும் பொதுப் போக்குவரத்து சேவையை விரிவுபடுத்தும் அரசாங்கத்தின் திட்டத்தின் கீழ், அடுத்த ஆண்டு யாழ்ப்பாணத்தில் Metro Bus சேவையை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.
இந்தச் சேவையை நடைமுறைப்படுத்துவது மற்றும் யாழ்ப்பாணத்தில் பொருத்தமான பேருந்து வழித்தடங்களைத் தெரிவு செய்வது தொடர்பாக வீதி அபிவிருத்தி அதிகார சபை, மாகாண போக்குவரத்து அதிகார சபை மற்றும் இலங்கை பொலிஸார் உள்ளிட்ட தொடர்புடைய அரச நிறுவனங்களுடன் ஆரம்பகட்டக் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், முன்மொழியப்பட்ட வழித்தடங்களின் பொருத்தப்பாட்டை மதிப்பிடும் வகையில் சோதனை ஓட்டங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன்படி, 2027ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் Metro Bus சேவையை வெற்றிகரமாக அறிமுகப்படுத்த முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இதற்கிடையில், Metro Bus சேவையின் இரண்டாம் கட்ட விரிவாக்கத்திற்காக கண்டி நகரமும் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கண்டியிலும் ஏற்கனவே ஒரு மாதகால சோதனைச் சேவை முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், இதன்போது Metro Bus சேவையை நடைமுறைப்படுத்துவதற்கான பொருத்தமான வழித்தடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
ஆரம்பத்தில் 10 பேருந்துகளுடன் கொழும்பில் அறிமுகப்படுத்தப்பட்ட Metro Bus சேவை, பின்னர் 122 பேருந்துகளாக விரிவுபடுத்தப்பட்டதாகவும், தற்போது கொழும்பில் இச்சேவை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 2029ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் நாட்டின் ஏனைய முக்கிய நகரங்களுக்கும் Metro Bus சேவையை விரிவுபடுத்துவதற்கான செயற்திட்டம் அரசாங்கத்தினால் தயாரிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.