விஹாரமஹாதேவி பூங்காவில் பிக்குகளின் சத்தியாக்கிரகப் போராட்டம்: நீதிமன்ற உத்தரவைத் திருத்தக் கோரிய மனு நிராகரிப்பு!
விஹாரமஹாதேவி பூங்காவில் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பௌத்த பிக்குகள் உள்ளிட்ட போராட்டக்காரர்களை அங்கிருந்து வெளியேறுமாறு பிறப்பிக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவைத் திரும்பப் பெறவோ, திருத்தவோ முடியாது என கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதராகம முன்னிலையில், நேற்று (23) வெள்ளிக்கிழமை இந்த விடயம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பௌத்த பிக்குகள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள், போராட்டக்காரர்களை அந்த இடத்திலிருந்து வெளியேறுமாறு கடந்த வியாழக்கிழமை (22) பிறப்பிக்கப்பட்ட உத்தரவைத் திரும்பப் பெறவோ அல்லது திருத்தவோ கோரி மனுவொன்றைச் சமர்ப்பித்தனர்.
எனினும், குறித்த உத்தரவில் மாற்றங்களைச் செய்ய முடியாது என நீதவான் அறிவித்தார்.
மேலும், நீதிமன்ற உத்தரவை மீறிச் செயற்படும் பட்சத்தில், தண்டனைச் சட்டக்கோவையின் கீழ் பொலிஸார் உரிய சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என்றும் நீதவான் குறிப்பிட்டார்.
இந்த வழக்கு தொடர்பில், போராட்டக்காரர்கள் சார்பிலான சட்டத்தரணிகளும் சட்டமா அதிபர் தரப்பினரும் வெவ்வேறு மனுக்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.