விளக்கமறியலில் உள்ள மகன் நாமல் ராஜபக்ஷவுக்கு உருக்கமான கடிதம் எழுதிய மஹிந்த
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தனது மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவுக்கு உருக்கமான கடிதமொன்றை எழுதியுள்ளார்.
கடந்த 2010ஆம் ஆண்டு நாமல் ராஜபக்ஷ அரசியலில் பிரவேசித்தபோது, அவருக்கு வழங்கிய ஆலோசனைகளை நினைவுகூர்ந்தே மஹிந்த ராஜபக்ஷ இந்தக் கடிதத்தை எழுதியுள்ளார்.
அரசியலில் ஈடுபடுவதற்கு முன்னர் நாமல் தன்னிடம் அனுமதி கோரியதாகக் குறிப்பிட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷ, அப்போது சிறை வாழ்க்கையையும் பல்வேறு சிரமங்களையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் எனத் தாம் எச்சரித்ததாகத் தெரிவித்துள்ளார்.
“நீ அரசியலில் ஈடுபட விரும்பினால் ஈடுபடு. ஆனால், சிறைக்குச் செல்லவும் சிரமங்களை எதிர்கொள்ளவும் தயாராக இருக்க வேண்டும்” எனத் தாம் மகனிடம் கூறியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனது மகன் பிறப்பதற்கு முன்னர், அரசியலில் பிரவேசித்த சிறிது காலத்திலேயே ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தாம் சிறையில் அடைக்கப்பட்டதாகக் கூறியுள்ள மஹிந்த ராஜபக்ஷ, தனது சொந்த அனுபவத்தின் அடிப்படையிலேயே இந்த ஆலோசனையை வழங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், நீதித்துறை மீது நம்பிக்கை வைக்குமாறு நாமல் ராஜபக்ஷவுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார். தான் சிறையில் இருந்த காலத்தில் நீதித்துறை மீதான நம்பிக்கையே தனக்கு ஒரே ஆதரவாக இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
“யார் என்ன கூறினாலும், நீதித்துறை மீது மட்டுமே நம்பிக்கை வைக்க வேண்டும்” என அவர் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
இதற்கிடையில், தானும் தனது மனைவி ஷிரந்தி ராஜபக்ஷவும் தற்போது கொழும்பிலுள்ள நவலோகா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். நாமல் ராஜபக்ஷ பிறந்ததும் இதே வைத்தியசாலையில்தான் என அவர் நினைவுகூர்ந்துள்ளார்.
தமது இளைய மகன்களான யோஷித மற்றும் ரோஹித ராஜபக்ஷ ஆகியோர் வைத்தியசாலையில் தங்கியுள்ள தம்மையும் தனது மனைவியையும் கவனித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
யோஷித ராஜபக்ஷ தொடர்பான சட்ட நடவடிக்கைகள் குறித்துக் குறிப்பிட்டுள்ள மஹிந்த, அவருக்கு எதிரான வழக்குகளில் ஒன்று அவர் கடற்படையில் இணைவதற்காக எடுத்த முடிவுடன் தொடர்புடையது எனக் கூறியுள்ளார்.
அதேவேளை, எதிர்காலத்தில் மீண்டும் அதிகாரத்துக்கு வந்தால் அரசியல் எதிரிகள் மீது பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என நாமல் ராஜபக்ஷவிடம் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அரசியல்வாதிகளின் செயல்களுக்காக அவர்களின் பிள்ளைகளைப் பொறுப்பாக்கக் கூடாது எனத் தெரிவித்துள்ள அவர், பழிவாங்காமல் இருப்பதே ராஜபக்ஷ குடும்பத்தின் வழிமுறையும் பாரம்பரியமும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் தமது குடும்பம் பங்களிப்புச் செய்திருந்தபோதிலும், தமது குடும்பத்தினர் நியாயமற்ற வகையில் குற்றஞ்சாட்டப்பட்டதாகவும் மஹிந்த ராஜபக்ஷ தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
தேர்தல்களில் தோல்விகளைச் சந்தித்திருந்தாலும், இலங்கை மக்கள் நன்றியுணர்வு கொண்டவர்கள் என்ற நம்பிக்கையை நாமல் தொடர்ந்து பேண வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
பௌத்த மத ஆசீர்வாதத்துடன் இந்தக் கடிதத்தை மஹிந்த ராஜபக்ஷ நிறைவு செய்துள்ளார்.
கிரிஷ் பரிவர்த்தனை வழக்கில் விளக்கமறியல்
கிரிஷ் பரிவர்த்தனை தொடர்பான வழக்கில் பிணை கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நாமல் ராஜபக்ஷவும் கிரிஷ் குழுமத்தின் முன்னாள் பணிப்பாளர் ஜானகி சிறிவர்தனவும் எதிர்வரும் நவம்பர் 6ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.