லிட்ரோ எரிவாயு: அடுத்த மூன்று நாட்களில் 350,000 சிலிண்டர்களை விநியோகிக்கத் திட்டம்
நாட்டின் எப் பகுதிகளிலும் தடையின்றி உள்நாட்டு எரிவாயு விநியோகத்தை உறுதி செய்யும் வகையில், அடுத்த மூன்று நாட்களுக்குள் சந்தையில் 350,000 எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்கத் திட்டமிட்டுள்ளதாக லிட்ரோ கேஸ் லங்கா (Litro Gas Lanka) அறிவித்துள்ளது.
அரச நாளேடான 'தினமின' (Dinamina) வெளியிட்ட தகவலின்படி, 3,900 மெற்றிக் தொன் எரிவாயுவை ஏற்றிச் சென்ற 'கொரிந்தியன்' (CORINTHIAN) என்ற கப்பல் நேற்றைய தினம் (22) இலங்கை வந்தடைந்ததாகவும், அன்றைய தினம் மதியப் பொழுதிலேயே இறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த எரிவாயு கப்பலின் வருகையானது, எந்தவொரு தடையுமின்றி நாடு முழுவதும் எரிவாயு சிலிண்டர்களைத் தொடர்ந்து விநியோகிக்க வழிவகுக்கும் என்றும், இதன் மூலம் நுகர்வோர் வழக்கம் போல் எரிவாயுவை வாங்க முடியும் என்றும் லிட்ரோ கேஸ் லங்கா குறிப்பிட்டுள்ளது.
நாட்டின் இயல்பு நிலை பாதிக்கப்படாமல் எரிவாயு விநியோகம் தொடர்ந்து பராமரிக்கப்பட்டு வருவதாகவும் நிறுவனம் பொதுமக்களுக்கு உறுதியளித்துள்ளது.
இதற்கமைய, எரிவாயு விநியோகம் எப்போதும் போல் தொடரும் என்பதால், பொதுமக்கள் யாரும் தேவையின்றி எரிவாயு சிலிண்டர்களைச் சேமித்து வைப்பதைத் தவிர்க்குமாறு லிட்ரோ நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.