வாப்போயா தினத்தை முன்னிட்டு வங்கியின் பெயரில் போலி பரிசுச் செய்தி – பொதுமக்களுக்கு SLCERT எச்சரிக்கை!
இலங்கையின் முன்னணி வங்கி ஒன்று, எதிர்வரும் வாப்போயா தினத்தை முன்னிட்டு விசேட பரிசுகளை வழங்குவதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் போலியான செய்தி தொடர்பில், இலங்கை கணினி அவசர தயார்நிலை அணியான SLCERT பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (25) அனுஷ்டிக்கப்படவுள்ள வாப்போயா தினத்தை முன்னிட்டு, குறித்த வங்கி விசேட பரிசுத் திட்டமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளதாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், அவ்வாறான எந்தவொரு பரிசுத் திட்டத்தையும் குறித்த வங்கி அறிவிக்கவோ அறிமுகப்படுத்தவோ இல்லை என SLCERT உறுதிப்படுத்தியுள்ளது.
இந்தப் போலிச் செய்தியானது, பொதுமக்களை ஏமாற்றி அவர்களது தனிப்பட்ட தகவல்கள், வங்கிக் கணக்கு விபரங்கள் மற்றும் ஏனைய முக்கியமான தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் பரப்பப்படுவதாக நம்பப்படுகின்றது என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இவ்வாறான மோசடிகளில் சிக்கிக்கொள்வோரின் வங்கிக் கணக்குகள் ஊடுருவப்படுவதற்கும், அவர்களது நிதி இழக்கப்படுவதற்கும் வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
எனவே, சமூக ஊடகங்களில் பரவும் இத்தகைய செய்திகளுடன் இணைக்கப்பட்டுள்ள சந்தேகத்திற்கிடமான இணைப்புகளைத் திறக்க வேண்டாம் எனவும், இணையத்தில் பரவும் போலியான பரிசு அறிவிப்புகள் தொடர்பில் மிகுந்த விழிப்புடன் இருக்குமாறும் SLCERT பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.