ரூ. 46 மில்லியன் பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் மியன்மார் பிரஜை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!
இலங்கைக்குள் ரூ. 46.46 மில்லியன் பெறுமதியான குஷ் (Kush) போதைப்பொருளைக் கடத்த முயன்ற குற்றச்சாட்டில், 22 வயதுடைய மியன்மார் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று (21) கைது செய்யப்பட்டுள்ளார்.
விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகள், இன்று அதிகாலை விமான நிலையத்திலிருந்து வெளியேற முயன்றபோது குறித்த சந்தேகநபரைக் கைது செய்துள்ளனர்.
தாய்லாந்தின் பேங்கொக் நகரிலிருந்து தாய் எயார்வேஸ் விமானமான TG-307 மூலம் இன்று அதிகாலை சுமார் 1.45 மணியளவில் சந்தேகநபர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது, அவரது பயணப் பொதிகளைச் சோதனையிட்ட அதிகாரிகள், ஆடைகள், இனிப்புப் பண்டங்கள் மற்றும் உணவுப் பொருட்களுக்கு மத்தியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மூன்று பொதிகளில் இருந்து 4.646 கிலோகிராம் குஷ் போதைப்பொருளைக் கண்டுபிடித்துள்ளனர்.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி ரூ. 46.46 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர், கைப்பற்றப்பட்ட போதைப்பொருளுடன் இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, மேலதிக விசாரணைகளுக்காக அவர் கொழும்பிலுள்ள பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் தலைமையகத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.