ரூ. 100 இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு: பேருந்து நிலையத்தில் அதிகாரி கைது!
கம்பஹா பிராந்திய வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையில் பணியாற்றும் அதிகாரி ஒருவர், 100 ரூபாய் இலஞ்சம் கோரிப் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் (CIABOC) அதிகாரிகளால் இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ரத்தொலுகமவிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணிக்கும் 188ஆம் இலக்க பேருந்து, தனது வழக்கமான நேர அட்டவணையை விடத் தாமதமாகப் புறப்படுவதற்கு அனுமதி வழங்குவதற்கும், பேருந்தின் பணியாளர்களுக்கு சாதகமான புறப்படும் நேர ஒழுங்கை ஏற்படுத்துவதற்கும் குறித்த அதிகாரி 100 ரூபாய் இலஞ்சம் கோரியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நேர அட்டவணை அதிகாரியாகப் பணியாற்றும் சந்தேகநபர், ஒக்டோபர் 20ஆம் திகதி நண்பகல் சுமார் 12.25 மணியளவில் ரத்தொலுகம பேருந்து நிலையத்திலுள்ள நேர அட்டவணை அலுவலகத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பேருந்தில் பணியாற்றும் ஒருவரால் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.