மொரட்டுவ துப்பாக்கிச் சூடு: சிசிடிவி காட்சிகள் வெளியீடு – உணவக உரிமையாளர் பலி!
இலங்கையின் மொரட்டுவ பகுதியில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உணவக உரிமையாளர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளன.
குறித்த உணவகத்தில் பணப்பெட்டிக்கு அருகில் இருந்த உரிமையாளரை இலக்கு வைத்து, காரில் வந்த அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த உணவக உரிமையாளர், களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கிச் சூடு இடம்பெற்ற நேரத்தில் உணவகத்தில் இருந்த பெண் ஒருவரும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, சந்தேகநபர்கள் தப்பிச் சென்ற கார், பிலியந்தலை பகுதியில் தொழில்நுட்பக் கோளாறுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, சந்தேகநபர்கள் வானத்தை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு, மோட்டார் சைக்கிள் ஒன்றைக் கொள்ளையிட்டு அதில் தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.