உலக பௌத்த சங்கப் பேரவையின் 60ஆவது ஆண்டு விழா இலங்கையில்!
உலக பௌத்த சங்கப் பேரவையின் 60ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் நிகழ்வுகள் எதிர்வரும் நவம்பர் 28ஆம் திகதி முதல் டிசம்பர் 2ஆம் திகதி வரை இலங்கையில் நடைபெறவுள்ளன.
இந்த சர்வதேச நிகழ்வில் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பௌத்த பிக்குகள் உள்ளிட்ட பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த மாநாடு நவம்பர் 28ஆம் திகதி களனியில் அமைந்துள்ள நாகானந்த சர்வதேச பௌத்த கற்கைகள் நிறுவனத்தில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் தலைமையில் ஆரம்பமாகவுள்ளது.
இதனை முன்னிட்டு அநுராதபுரம் மற்றும் கண்டி ஆகிய நகரங்களிலும் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
சர்வதேச மாநாட்டுக்கான ஏற்பாடுகளை மீளாய்வு செய்யும் விசேட கலந்துரையாடல் நேற்று (26) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
உலக பௌத்த சங்கப் பேரவையின் ஏற்பாட்டுக் குழுத் தலைவர் வண. கலாநிதி போதாகம சந்திம தேரர், பொதுச் செயலாளர் வண. கலாநிதி மைத்திப்பே விமலசார மகா தேரர் மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க உள்ளிட்டோர் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.
மாநாட்டில் உலகின் பல்வேறு நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பௌத்த பிக்குகள், வெளிநாடுகளில் வசிக்கும் சுமார் 250 இலங்கையர்கள் மற்றும் இலங்கையைச் சேர்ந்த சுமார் 250 பௌத்த பிக்குகள் உள்ளிட்ட 600க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்துகொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
வெளிநாடுகளிலிருந்து வருகைதரும் பௌத்த பிக்குகள் மற்றும் ஏனைய பிரதிநிதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டது. அத்துடன், மருத்துவச் சேவைகள், முதலுதவி வசதிகள் மற்றும் அத்தியாவசிய உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
இந்தச் சர்வதேச மாநாட்டின் ஊடாக நாட்டுக்குக் கிடைக்கக்கூடிய பொருளாதார நன்மைகள் குறித்தும் அதிகாரிகள் கவனம் செலுத்தினர். அதிக எண்ணிக்கையிலான வெளிநாட்டுப் பிரதிநிதிகளின் வருகை அந்நியச் செலாவணி வருவாயை அதிகரிப்பதுடன், இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கும் பங்களிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, 'டிட்வா' சூறாவளியால் சேதமடைந்த 15 பௌத்த விகாரைகளின் புனரமைப்புப் பணிகளுக்கு உதவும் வகையில், ஒவ்வொரு விகாரைக்கும் தலா 5 இலட்சம் ரூபாவை வழங்க உலக பௌத்த சங்கப் பேரவை முன்மொழிந்துள்ளது.
இந்த உதவித் திட்டம் தொடர்பிலும் மாநாடு நடைபெறும் இடங்கள் மற்றும் அவற்றைச் சூழவுள்ள நகரங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், அலங்காரப் பணிகளை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட ஏற்பாடுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் பௌத்த மதகுருமார்கள், அரசாங்க அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் பிரிவுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, பௌத்த அலுவல்கள் திணைக்களம், இலங்கைப் பொலிஸ் மற்றும் இலங்கை இராணுவம் ஆகியவற்றின் அதிகாரிகளும் இதில் பங்கேற்றனர்.