அரசு நிர்ணயித்த விலையை மீறி அரிசி விற்பனை – வெலிமடையில் பல்பொருள் அங்காடிக்கு ரூ. 5 இலட்சம் அபராதம்!
வெலிமடை பகுதியில் இறக்குமதி செய்யப்பட்ட கீரி சம்பா அரிசியை அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்த பல்பொருள் அங்காடிக்கு ரூ. 500,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த பல்பொருள் அங்காடியில் ஒரு கிலோகிராம் இறக்குமதி செய்யப்பட்ட கீரி சம்பா அரிசி ரூ. 260க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. எனினும், குறித்த அரிசிக்கான அரசாங்கத்தின் அதிகபட்ச சில்லறை விலை ரூ. 255 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதன் மூலம் ஒரு கிலோகிராமுக்கு ரூ. 5 மேலதிகமாக அறவிடப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.
இது தொடர்பாக நுகர்வோர் விவகார அதிகார சபையினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்ததைத் தொடர்ந்து, குறித்த பல்பொருள் அங்காடிக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2025ஆம் ஆண்டு டிசம்பர் 4ஆம் திகதி, நுகர்வோர் விவகார அதிகார சபையின் பதுளை மாவட்ட அலுவலக அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின்போது இந்த விலைமீறல் கண்டறியப்பட்டது.
இதன்போது, அதிகார சபையின் விசாரணை அதிகாரி ஒருவர், இறக்குமதி செய்யப்பட்ட கீரி சம்பா (GR 11) அரிசியை ஒரு கிலோகிராம் ரூ. 260க்கு கொள்வனவு செய்துள்ளார். இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டது.
அத்தியாவசியப் பொருட்களின் விலைக் கட்டுப்பாடுகள் முறையாகப் பின்பற்றப்படுவதை உறுதிப்படுத்தவும், நுகர்வோரின் உரிமைகளைப் பாதுகாக்கவும் நாடளாவிய ரீதியில் சோதனைகள் மற்றும் சுற்றிவளைப்புகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருவதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
மேலும், பொருட்களை நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்தல் உள்ளிட்ட நுகர்வோர் பாதுகாப்புச் சட்ட மீறல்கள் தொடர்பில் பொதுமக்கள் 1977 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாக முறைப்பாடுகளைத் தெரிவிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.