புரூக்ளின் கட்டட இடிபாடு: உயிரிழப்பு 8 ஆக அதிகரிப்பு; மீட்புப் பணிகள் தீவிரம்
அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் உள்ள புரூக்ளின் பகுதியில் மூன்று மாடிக் கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை எட்டாக அதிகரித்துள்ளது.
கட்டட இடிபாடுகளுக்குள் மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படும் நிலையில், அவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கட்டுமானப் பணிகள் இடம்பெற்று வந்த காணியொன்றுக்கு அருகிலிருந்த மூன்று மாடிக் கட்டடம் புதன்கிழமை பிற்பகல் திடீரென இடிந்து விழுந்ததாக நகர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அண்டைய காணியில் கட்டுமானத் தொழிலாளர்கள் நிலத்தைத் தோண்டிக்கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
எனினும், கட்டடம் இடிந்து விழுந்ததற்கான சரியான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. சம்பவம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த விபத்தில் குறைந்தது 17 பேர் காயமடைந்துள்ளதுடன், அவர்களில் மூன்று தீயணைப்புப் படையினரும் அடங்குவதாக நியூயோர்க் நகர மேயர் சோஹ்ரான் மம்தானி தெரிவித்துள்ளார்.
புதன்கிழமை இரண்டு உயிரிழப்புகள் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், ஏனைய ஆறு உயிரிழப்புகளும் வியாழக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
இரவு முழுவதும் தொடர்ந்த மீட்புப் பணிகள்
இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்பதற்காக நூற்றுக்கணக்கான தீயணைப்புப் படையினரும் பொலிஸாரும் இரவு முழுவதும் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
மீட்புப் பணியாளர்கள் இடிபாடுகளுக்கு இடையிலான சிறிய இடைவெளிகளினூடாகத் தேடுதல் நடத்தி, பாதிக்கப்பட்டவர்களை மீட்டுள்ளனர். மோப்ப நாய்களும் இந்த நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
மேலும், இரண்டு கனரக இயந்திரங்கள் மூலம் பெரிய அளவிலான கட்டட இடிபாடுகள் அகற்றப்பட்டு வருகின்றன. இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த உயிர் பிழைத்த சிலரும் மீட்கப்பட்டுள்ளனர்.
புதன்கிழமை இரவு கர்ப்பிணிப் பெண் ஒருவர் இடிபாடுகளுக்குள் இருந்து மீட்கப்பட்டு, ஸ்ட்ரெச்சர் மூலம் வெளியே கொண்டுவரப்பட்டு அவசரமாக வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
### மழையால் மீட்புப் பணிகளுக்கு பாதிப்பு ஏற்படலாம்
வியாழக்கிழமை பிற்பகல் கனமழை பெய்யக்கூடும் என வானிலை முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில், அது மீட்புப் பணிகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தலாம் என நியூயோர்க் தீயணைப்புத் திணைக்கள ஆணையாளர் லில்லியன் பொன்சிக்னோர் எச்சரித்துள்ளார்.
மழை காரணமாக இடிபாடுகள் சேறும் சகதியுமாக மாறக்கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், தேவையானால் மழையிலும் மீட்புப் பணிகள் தொடரும் என உறுதியளித்துள்ளார்.
இடிந்து விழுந்த கட்டடத்தின் பெரும்பகுதி அருகிலிருந்த கட்டுமானப் பள்ளத்துக்குள் விழுந்துள்ளது. குடியிருப்புகளும் தரைத்தளத்தில் வர்த்தக நிலையங்களும் கொண்ட கலப்பு பயன்பாட்டுக் கட்டடமாக இது இருந்துள்ளது.
இடிந்து விழுந்த கட்டடத்துடன் சுவரைப் பகிர்ந்துகொண்ட மற்றொரு கட்டடம் தொடர்ந்து நிலைத்திருந்தாலும், அதன் ஒரு பக்கச் சுவர் முற்றாகச் சேதமடைந்துள்ளது. இதனால் உள்ளே இருந்த அறைகள் மற்றும் பொருட்கள் வெளிப்பட்டுள்ளன.
மீட்புப் பணிகள் மிகவும் ஆபத்தான சூழலில் முன்னெடுக்கப்படுவதாகத் தெரிவித்த தீயணைப்புத் திணைக்கள ஆணையாளர், ஒவ்வொரு நடவடிக்கையும் மிகுந்த கவனத்துடனும் திட்டமிடலுடனும் மேற்கொள்ளப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், இந்த அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள மேயர் சோஹ்ரான் மம்தானி, காயமடைந்தவர்கள் மற்றும் துயரத்தில் உள்ள அனைவருக்கும் தனது அனுதாபங்களையும் தெரிவித்துள்ளார்.