ஈரானுடனான போர் இராணுவ ரீதியாக முடிவுக்கு வந்துவிட்டது – டொனால்ட் ட்ரம்ப்
ஈரானுக்கு எதிரான போர் இராணுவ ரீதியாக ஏறத்தாழ முடிவுக்கு வந்துவிட்டதாகத் தாம் கருதுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரானுடன் இடம்பெற்று வரும் பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், தற்போதைக்கு மீண்டும் இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டிய அவசியம் இருப்பதாகத் தெரியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவித்த அவர், தற்போதைய சூழ்நிலையில் இராணுவ நடவடிக்கைகள் அவசியமற்றதாகத் தோன்றினாலும், நிலைமையில் மாற்றம் ஏற்பட்டால் உடனடியாகச் செயல்பட அமெரிக்கப் படைகள் தயாராக இருப்பதாகக் கூறினார்.
மேலும், இந்த மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சாதகமான நகர்வுகள் இடம்பெற்று வருவதாகவும், போர் விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்ப்பதாகவும் ட்ரம்ப் தெரிவித்தார். எனினும், இது தொடர்பில் உறுதியான உத்தரவாதம் எதனையும் வழங்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
கட்டாரின் பிரதமர் ஷேக் மொஹமட் பின் அப்துல்ரஹ்மான் பின் ஜாசிம் அல் தானியுடன் ஈரான் தொடர்பான தற்போதைய நிலைமைகள் குறித்து கலந்துரையாடியதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
தனது Truth Social சமூக வலைத்தளப் பதிவில், கட்டார், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம், பஹ்ரைன், குவைத் உள்ளிட்ட பிராந்திய நாடுகள் தற்போதைய நிலைமையைத் தொடர்ந்து பேணுவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடற்படை முற்றுகை மற்றும் 'Operation Iron Gate' நடவடிக்கை உள்ளிட்ட தற்போதைய ஏற்பாடுகளைத் தொடர்வது தொடர்பிலும் இந்த நாடுகள் விருப்பம் கொண்டுள்ளதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஈரான் ஒருபோதும் அணுவாயுதத்தைப் பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்படக் கூடாது என்பதில் பிராந்திய நாடுகள் அனைத்தும் ஒருமித்த நிலைப்பாட்டைக் கொண்டுள்ளதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
போர் முடிவுக்கு வந்துவிட்டதாக அமெரிக்கா ஏன் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை எனக் கேட்கப்பட்டபோது, பிராந்திய நட்பு நாடுகளின் நீண்டகாலப் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய அவசியம் இருப்பதாக ட்ரம்ப் பதிலளித்துள்ளார்.
அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைகள் ஈரானின் இராணுவ வலிமையைப் பெருமளவில் பலவீனப்படுத்தியுள்ளதாகவும், ஆறு மாதங்களுக்கு முன்னர் இருந்ததை விட இஸ்ரேல் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகள் தற்போது பாதுகாப்பான நிலையில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் ஆகியோருடனான பேச்சுவார்த்தைகள் சாதகமானதாக அமைந்ததாக கட்டார் பிரதமர் தெரிவித்துள்ளார்.
இந்தப் பேச்சுவார்த்தைகளில் பிராந்தியத்தின் தற்போதைய நிலைமை மற்றும் மத்திய கிழக்கில் அமைதியை ஏற்படுத்தக்கூடிய உடன்பாட்டை எட்டும் நோக்கில் அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டதாக அவர் தனது X சமூக வலைத்தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இராஜதந்திர முயற்சிகளால் சர்வதேச எண்ணெய் விலைகள் வீழ்ச்சி
இதற்கிடையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ஈரானுக்கு எதிரான மோதலை இராஜதந்திர ரீதியில் முடிவுக்குக் கொண்டுவருவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ள நிலையில், திங்கட்கிழமை சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலைகள் கணிசமாக வீழ்ச்சியடைந்துள்ளன.
AFP செய்தி நிறுவனத்தின் தகவலின்படி, பிரென்ட் (Brent) மசகு எண்ணெயின் விலை 5.9 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்து பீப்பாய் ஒன்றுக்கு 92.57 அமெரிக்க டொலராகப் பதிவாகியுள்ளது.
அதேவேளை, அமெரிக்காவின் WTI மசகு எண்ணெய் விலை 4.4 சதவீதத்தால் குறைந்து பீப்பாய் ஒன்றுக்கு 86.85 அமெரிக்க டொலராகப் பதிவாகியுள்ளது.
ஈரானுக்கு எதிராக மேலதிக இராணுவத் தாக்குதல்கள் நடத்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவாக இருப்பதாக ட்ரம்ப் வெளியிட்ட கருத்துக்களைத் தொடர்ந்து எண்ணெய் விலைகளில் இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.