பிரான்ஸ் பல்பொருள் அங்காடிகளின் குளிரூட்டும் சாதனங்கள் மீது சைபர் தாக்குதல் – ஈரான் மீது குற்றச்சாட்டு!
பிரான்ஸில் உள்ள பல்பொருள் அங்காடிகளின் குளிரூட்டும் சாதனங்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட சைபர் தாக்குதல்களின் பின்னணியில் ஈரான் இருப்பதாக பிரான்ஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.
இந்தத் தாக்குதல்கள் தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்துள்ள பிரான்ஸ் அதிகாரிகள், ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படையுடன் (IRGC) தொடர்புடைய சைபர் தாக்குதல் பிரிவு ஒன்றின் மீது சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
கடந்த ஒக்டோபர் 11 மற்றும் 12ஆம் திகதிகளில் பிரான்ஸின் பல்பொருள் அங்காடிகள் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல்களால் பெருமளவிலான உணவுப் பொருட்கள் சேதமடைந்ததுடன், சில இடங்களில் தீ விபத்துகளும் ஏற்பட்டுள்ளன.
இந்தத் தாக்குதல்களுக்கு ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படையே பொறுப்பு என உறுதிப்படுத்தியுள்ள பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் ஜீன்-நோயல் பரோட், ஈரான் தூதுவர் அழைக்கப்பட்டு விளக்கம் கோரப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும், ஈரானுக்கு எதிராக ஐரோப்பிய மட்டத்தில் தடைகளை விதிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்தத் தாக்குதல் முன்னெப்போதும் இல்லாத அளவிலான தீவிரத்தன்மையைக் கொண்டுள்ளதாகத் தெரிவித்த அவர், பிரான்ஸ் மண்ணில் நாசவேலை நோக்கத்துடன் முன்னெடுக்கப்பட்ட முதலாவது பாரிய சைபர் தாக்குதல் இதுவெனவும் சுட்டிக்காட்டினார்.
இது பிரான்ஸின் தேசிய நலன்களுக்கும் மக்களின் பாதுகாப்புக்கும் எதிரான பாரிய தாக்குதல் எனக் குறிப்பிட்ட அவர், இதற்குப் பதிலளிக்காமல் இருக்க முடியாது என்றும் தெரிவித்தார்.
இதனிடையே, ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படையுடன் தொடர்புடைய 'ஷாஹித் காவே' (Shahid Kaveh) என்ற சைபர் தாக்குதல் பிரிவின் தலைவருக்கும் அதன் இரண்டு பிரதித் தலைவர்களுக்கும் எதிராக சர்வதேச கைது உத்தரவுகளைப் பிறப்பிக்குமாறு பாரிஸ் அரச சட்டத்தரணிகள் அலுவலகம் கோரிக்கை விடுத்துள்ளது.
விசாரணைகளின்படி, தாக்குதலாளர்கள் பாரசீக மொழியைப் பயன்படுத்தியதுடன், ஈரானில் அமைந்துள்ள சாதனைகளுடன் தொடர்புடைய இணைய நெறிமுறை முகவரிகள் (IP Addresses) ஊடாகத் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளனர்.
பல்பொருள் அங்காடிகளின் குளிரூட்டும் கட்டமைப்புகளுக்குள் இணையவழியாக ஊடுருவிய தாக்குதலாளர்கள், இரவு நேரங்களில் குளிரூட்டும் சாதனங்களின் வெப்பநிலையை 50 பாகை செல்சியஸ் வரை அதிகரித்துள்ளனர். இதனால் பல மில்லியன் யூரோக்கள் பெறுமதியான உணவுப் பொருட்கள் பழுதடைந்துள்ளதாக வர்த்தக நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
இந்தத் தாக்குதல்களால் E-Leclerc, Intermarché, Carrefour, Monoprix மற்றும் Coopérative U ஆகிய பல்பொருள் அங்காடி வலையமைப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன.
Intermarché மற்றும் அதன் Netto வர்த்தக வலையமைப்பைச் சேர்ந்த குறைந்தது 300 விற்பனை நிலையங்களும், Coopérative U நிறுவனத்தின் 100 இற்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. Carrefour நிறுவனத்தின் 80 விற்பனை நிலையங்களும், Monoprix நிறுவனத்தின் சுமார் 490 விற்பனை நிலையங்களில் ஐந்து சதவீதமானவையும் இந்தத் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளன.
இதேவேளை, கடந்த நவம்பர் 2ஆம் திகதி பெல்ஜியம், எஸ்டோனியா, அயர்லாந்து, லக்சம்பர்க் மற்றும் சுவீடன் ஆகிய ஐரோப்பிய நாடுகளிலும் பல்பொருள் அங்காடிகளின் குளிரூட்டும் கட்டமைப்புகளில் இதேபோன்ற பிரச்சினைகள் பதிவாகியுள்ளன.
இந்தச் சம்பவங்களின்போது இரவு நேரங்களில் வெப்பநிலை திடீரென அதிகரித்ததுடன், பல டஜன் விற்பனை நிலையங்களும் உணவுப் பொருட்கள் விநியோக மையம் ஒன்றும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.