பராகுவே ஜனாதிபதிக்கு எதிராக குற்றவியல் விசாரணை; பதவி நீக்க நடவடிக்கையும் ஆரம்பம்!
பராகுவேயில் முக்கிய வங்கியொன்றின் வீழ்ச்சியைத் தொடர்ந்து, ஜனாதிபதி சாண்டியாகோ பென்யாவுக்கு எதிராக குற்றவியல் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், அவரைப் பதவியிலிருந்து நீக்குவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதியுடன் வர்த்தகத் தொடர்புகளைக் கொண்டிருந்ததாகக் கூறப்படும் யூனோ (Ueno) வங்கி, நிதி நெருக்கடி காரணமாக நள்ளிரவில் மூடப்பட்டதைத் தொடர்ந்து இந்த சர்ச்சை தீவிரமடைந்துள்ளது. இதனால் மில்லியன் கணக்கான வாடிக்கையாளர்கள் தங்களது வைப்புப் பணத்தைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த வங்கி நெருக்கடி தொடர்பாக ஜனாதிபதி சாண்டியாகோ பென்யா மற்றும் முன்னாள் அரச அதிகாரிகளுக்கு எதிராகப் பராகுவே சட்டமா அதிபர் அலுவலகம் மூன்று குற்றவியல் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இதற்கிடையில், வங்கியுடனான தொடர்புகள் மற்றும் நெருக்கடியைக் கையாள்வதில் கடுமையான மற்றும் தொடர்ச்சியான கடமை தவறல்கள் இடம்பெற்றுள்ளதாகக் குற்றஞ்சாட்டி, ஜனாதிபதியைப் பதவி நீக்குவதற்கான பிரேரணையை நாடாளுமன்றத்தின் கீழவையான பிரதிநிதிகள் சபை அங்கீகரித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, ஜனாதிபதிக்கு எதிரான பதவி நீக்க விசாரணையை ஆரம்பிக்கவுள்ளதாக செனட் சபையும் அறிவித்துள்ளது.
தனக்கு எதிரான விசாரணையில் நேரில் முன்னிலையாகி, அரசியலமைப்பு மற்றும் நாட்டின் நிறுவனங்களுக்கு மதிப்பளித்து ஆதாரங்களுடனும் வாதங்களுடனும் தனது தரப்பை முன்வைக்கப்போவதாக பென்யா தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஆளும் கட்சியின் அதிருப்தியாளர்கள் உள்ளிட்ட 35 நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் விவாதம் இடம்பெற்றுக்கொண்டிருந்தபோதே, ஜனாதிபதி தனது பதவி விலகல் அறிவிப்பை வெளியிட்டார்.
எனினும், அவரது பதவி விலகலை ஏற்றுக்கொள்வது தொடர்பாக நாடாளுமன்றத்தின் இரு சபைகளும் இணைந்து நடத்திய கூட்டத்தில், சில உறுப்பினர்கள் வாக்கெடுப்பின் இடையே வெளியேறியதால் தீர்மானம் எதுவும் எட்டப்படாமல் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
ஜனாதிபதியின் பதவி விலகல் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தால் அவருக்கு சட்ட ரீதியான விலக்குரிமையும் விசேட பாதுகாப்புகளும் கிடைத்திருக்கும். ஆனால், பதவி நீக்கப்பட்டால் அத்தகைய பாதுகாப்புகள் கிடைக்காது எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதனால், பென்யா இன்னும் ஜனாதிபதியாகவே உள்ளார் என்றும், அவர் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவருக்கு எதிரான நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
வியாழக்கிழமை இரவு செனட் சபையில் ஜனாதிபதிக்கு எதிரான பதவி நீக்க விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், அது வெள்ளிக்கிழமையும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், ஜனாதிபதியை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என செனட் உறுப்பினர் யோலண்டா பரேடெஸ் வலியுறுத்தியுள்ளார்.
மறுபுறம், நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் பெரும்பான்மையைக் கொண்டுள்ள வலதுசாரி கொலராடோ கட்சி, ஜனாதிபதிக்கு ஆதரவாகச் செயற்பட்டு வருகிறது.
ஜனாதிபதி நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாகப் பரவிய தகவல்களையும் அவரது அலுவலகப் பேச்சாளர் மறுத்துள்ளார். அவர் தலைநகரிலேயே இருப்பதாகத் தெரிவித்துள்ள போதிலும், அவர் தங்கியுள்ள இடம் குறித்த விபரங்களை வெளியிடவில்லை.
வங்கி நெருக்கடியும் சர்ச்சையின் பின்னணியும்
6.1 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட பராகுவேயில் சுமார் 2.9 மில்லியன் வாடிக்கையாளர்களைக் கொண்ட யூனோ வங்கியின் நிதி நிலைமை தொடர்பாக மத்திய வங்கி மேற்கொண்ட ஆய்வில், அதன் மூலதனப் போதுமை விகிதம் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச அளவில் 50 சதவீதத்துக்கும் கீழ் வீழ்ச்சியடைந்துள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
நிதி அறிக்கைகளில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களின் விளைவாக இந்த நிலை ஏற்பட்டதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
மேலும், தொடர்புடைய நிறுவனங்களுக்கு வழங்கப்படும் கடன்களுக்கான வரம்புகளை யூனோ வங்கி மீறியுள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த வங்கியில் அரச நிறுவனங்களின் நிதிகளும் வைப்புச் செய்யப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, நாட்டின் பெரும்பாலான தொழிலாளர்களின் ஓய்வூதிய நிதியை நிர்வகிக்கும் சமூகப் பாதுகாப்பு நிறுவனமும் (IPS) இதில் பெருமளவு நிதியை வைப்புச் செய்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், வங்கியின் மேற்பார்வை, அதன் செயற்பாடுகளை முடிவுக்குக் கொண்டுவர எடுத்த நடவடிக்கைகள், அரச நிதிகள் வைப்புச் செய்யப்பட்டமை மற்றும் பல்வேறு அரச நிறுவனங்களின் அதிகாரிகளின் செயற்பாடுகள் குறித்து விசாரணை நடத்த சட்டமா அதிபர் எமிலியானோ ரோலோன் பெர்னாண்டஸ் உத்தரவிட்டுள்ளார்.
வங்கி மூடப்பட்டதைத் தொடர்ந்து வாடிக்கையாளர்களின் சேமிப்புகள் முடக்கப்பட்ட நிலையில், வியாழக்கிழமை இரவு முதல் குறிப்பிட்ட சில வாடிக்கையாளர்களுக்கு வைப்புத் தொகைக்கான உத்தரவாதக் கொடுப்பனவுகளைப் படிப்படியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இரண்டு நாட்களாக வங்கிகளுக்கு முன்னால் நீண்ட வரிசைகள் காணப்பட்டதுடன், மக்கள் மத்தியில் பதற்றமும் வீதிப் போராட்டங்களும் அதிகரித்திருந்தன. இந்நிலையிலேயே ஜனாதிபதி தனது பதவி விலகல் அறிவிப்பை வெளியிட்டார்.
44 வயதில் பராகுவேயின் இளம் ஜனாதிபதிகளில் ஒருவராகப் பதவியேற்ற சாண்டியாகோ பென்யா, 2023 ஆகஸ்ட் மாதம் முதல் ஐந்து ஆண்டுகளுக்கான பதவிக்காலத்தைக் கொண்டிருந்தார். இதற்கு முன்னர் 2015 முதல் 2017 வரை முன்னாள் ஜனாதிபதி ஹொராசியோ கார்டெஸ் ஆட்சியில் நிதியமைச்சராகவும், மத்திய வங்கியின் பணிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகத்துடன் நெருக்கமான உறவைக் கொண்டுள்ள தலைவர்களில் ஒருவராகவும் பென்யா கருதப்படுகிறார்.
இந்நிலையில், பராகுவேயில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு தொடர்ந்து வலுவாக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
பிராந்தியத்தின் நிதி மையமாகத் தன்னை நிலைநிறுத்திக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ள பராகுவே, அண்மைய ஆண்டுகளில் சர்வதேச கடன் மதிப்பீட்டு நிறுவனங்களிடமிருந்து முதலீட்டுத் தர அங்கீகாரத்தையும் பெற்றிருந்தது. இந்நிலையில், வங்கி நெருக்கடி அந்நாட்டின் நிதித்துறை நம்பகத்தன்மைக்கும் அரசியல் ஸ்திரத்தன்மைக்கும் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.