PUBG விளையாட்டின் தாக்கமா? 6 வயது சிறுமி மீது 8 வயது சிறுவன் கொடூரத் தாக்குதல்!
இந்தியாவின் ஹரியானா மாநிலம், பஞ்ச்குலாவில் உள்ள பாடசாலை ஒன்றில் 6 வயது சிறுமியை 8 வயது சிறுவன் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சிறுவன் PUBG உள்ளிட்ட வன்முறை நிறைந்த இணையவழி விளையாட்டுகளை விளையாடும் பழக்கத்தைக் கொண்டிருந்ததாக, தாக்குதலுக்கு உள்ளான சிறுமியின் மாமா தெரிவித்துள்ளார். இதனைச் சிறுவனின் தந்தையும் ஒப்புக்கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சம்பவத்தன்று, சிறுமியைப் பார்த்து சிறுவன் 'பைத்தியம்' எனக் கேலி செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சிறுமி, சிறுவனிடம் கேள்வி எழுப்பியதுடன், சம்பவம் தொடர்பாகப் புகார் அளிக்கப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, சிறுமியின் தந்தை மேல்மாடியில் இருப்பதாகக் கூறிய சிறுவன், அவரிடம் அழைத்துச் செல்வதாகத் தெரிவித்து, சிறுமியை ஆள்நடமாட்டமற்ற வகுப்பறைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு யாரும் இல்லாத நேரத்தில் சிறுமியைச் சரமாரியாகத் தாக்கியுள்ளார். கைகளாலும் கால்களாலும் தாக்கியதுடன், மழுங்கிய பொருட்களைக் கொண்டு சிறுமியின் தலையிலும் தாக்கியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த சிறுமி, சண்டிகரில் உள்ள PGIMER மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். சுமார் 40 மணி நேரத்திற்குப் பின்னரே அவர் சுயநினைவுக்குத் திரும்பியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது சிறுமியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், கடந்த இரண்டு முதல் மூன்று நாட்களாக மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து சிகிச்சை அளித்து வருவதாகவும் அவரது மாமா தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பாடசாலை நிர்வாகத்தின் அலட்சியம் தொடர்பான குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, இரண்டு JBT ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், இச்சம்பவத்தை ஹரியானா மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. சம்பவம் தொடர்பாக விரிவான அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு மாவட்டக் கல்வி அதிகாரிக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதற்காக ஹரியானா அரசு ஐந்து பேர் கொண்ட குழுவொன்றையும் அமைத்துள்ளது. அத்துடன், மாநிலம் முழுவதும் உள்ள பாடசாலைகளில் பாதுகாப்புத் தணிக்கைகளை மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பாடசாலை வளாகத்திலேயே ஆறு வயதுச் சிறுமி மீது நடத்தப்பட்ட இந்தக் கொடூரத் தாக்குதல் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதுடன், சிறுவர்கள் மத்தியில் வன்முறை நிறைந்த இணையவழி விளையாட்டுகளின் தாக்கம் குறித்தும் புதிய விவாதங்களை உருவாக்கியுள்ளது.
குறிப்பு: PUBG விளையாடிய பழக்கமே தாக்குதலுக்குக் காரணம் என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில், அது தொடர்பான தகவல் சிறுமியின் மாமா தெரிவித்த குற்றச்சாட்டாகவே முன்வைக்கப்பட்டுள்ளது.