தமிழகத்துக்கு வரவேண்டிய ரூ.1,614 கோடி கொரிய முதலீடுகள் ஆந்திராவுக்குச் சென்றுவிட்டன – ஸ்டாலின் குற்றச்சாட்டு
தமிழகத்துக்கு வரவேண்டிய 1,614 கோடி ரூபாய் மதிப்பிலான தென்கொரிய முதலீடுகள், தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசின் அலட்சியத்தால் ஆந்திர மாநிலத்துக்குச் சென்றுவிட்டதாக திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில், தமிழகத்தின் ஜிஎஸ்டி வருவாய் வளர்ச்சி தேசிய சராசரியைவிடக் குறைந்துள்ளதாகவும் விமர்சித்துள்ளார்.
அந்தப் பதிவில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
“காலையில் கடந்து வந்த இரு செய்திகள் கவனத்தை ஈர்த்தன. முதலாவதாக, ஜிஎஸ்டி வருவாய் வளர்ச்சியில் தேசிய சராசரிக்கும் கீழே தமிழகத்தின் வளர்ச்சி சென்றுள்ளது.
இரண்டாவதாக, தமிழகத்துக்கு வரவேண்டிய 1,614 கோடி ரூபாய் மதிப்பிலான கொரிய முதலீடுகள், தவெக அரசின் அலட்சியத்தால் ஆந்திராவுக்குச் சென்றுவிட்டன.
முதலீடுகளை ஈர்த்து தமிழகத்துக்குப் பெருமை சேர்த்த ‘கைடன்ஸ் தமிழ்நாடு’ அமைப்பே, இந்த ஆட்சியில் தனிநபர்களின் ஈகோவுக்குப் பலியாக்கப்பட்டுள்ளது.
அனைத்துத் துறைகளிலும் இவ்வளவு வேகமாகப் பின்னோக்கிச் செல்வது எப்படி என்பதை இவர்களிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும்.
இத்தகைய விடயங்கள் குறித்துப் புரிந்துகொள்ளாத நமது முதலமைச்சரோ, இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் கையசைத்து விளம்பரம் தேடுவதற்காகக் கிளம்பிவிட்டார்” என ஸ்டாலின் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்துக்கான முதலீடுகள் ஆந்திராவுக்குச் சென்றுவிட்டதாக ஸ்டாலின் முன்வைத்துள்ள இந்தக் குற்றச்சாட்டு அரசியல் வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.