LankaQR பயனர்களுக்கு ரூ. 5.1 கோடி பரிசு; ஒக்டோபர் 27 முதல் அதிர்ஷ்டக் குலுக்கல்!
இலங்கையில் LankaQR கொடுப்பனவு முறையைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் மற்றும் வர்த்தகர்களுக்காக, மொத்தம் 5.1 கோடி ரூபா பணப்பரிசுகளை வழங்கும் அதிர்ஷ்டக் குலுக்கல் திட்டம் எதிர்வரும் ஒக்டோபர் 27ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.
GovTech Sri Lanka (Pvt.) Ltd. வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஆறு மாத காலப்பகுதியில் 6,000க்கும் மேற்பட்ட வெற்றியாளர்களுக்குப் பணப்பரிசுகள் வழங்கப்படவுள்ளதுடன், ஒருவருக்கு அதிகபட்சமாக 10 இலட்சம் ரூபா வரை பரிசு வெல்லும் வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது.
2026 செப்டெம்பர் 1ஆம் திகதி முதல் 2027 பெப்ரவரி 28ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மேற்கொள்ளப்படும் அனைத்து LankaQR பரிவர்த்தனைகளும் இந்தக் குலுக்கலில் தானாகவே இணைக்கப்படும். இதற்காகத் தனியாகப் பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
### வாராந்தம் ரூ. 5,000 பரிசு
இந்தத் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு வாரமும் 250 வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர். இவர்களில் 125 பேர் வாடிக்கையாளர்களாகவும், ஏனைய 125 பேர் வர்த்தகர்களாகவும் இருப்பர். ஒவ்வொரு வெற்றியாளருக்கும் தலா 5,000 ரூபா வழங்கப்படும்.
மாதாந்தம் 10 இலட்சம் ரூபா வரை பரிசு
மாதாந்தப் பிரதான குலுக்கலில் ஆறு வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர். இவர்களில் மூவர் வாடிக்கையாளர்களாகவும், மூவர் வர்த்தகர்களாகவும் இருப்பர்.
இந்தக் குலுக்கலில் இரண்டு வெற்றியாளர்களுக்கு தலா 10 இலட்சம் ரூபாவும், மேலும் இரண்டு வெற்றியாளர்களுக்கு தலா 5 இலட்சம் ரூபாவும், ஏனைய இரண்டு வெற்றியாளர்களுக்கு தலா 2.5 இலட்சம் ரூபாவும் வழங்கப்படவுள்ளன.
வர்த்தகருக்கு மேற்கொள்ளப்படும் கொடுப்பனவுகள் மற்றும் நபருக்கு நபர் மேற்கொள்ளப்படும் பணப் பரிமாற்றங்கள் உள்ளிட்ட தகுதியான ஒவ்வொரு LankaQR பரிவர்த்தனையும் குலுக்கலில் இணைக்கப்படும். இதன் மூலம், குறித்த பரிவர்த்தனையில் ஈடுபடும் இரு தரப்பினருக்கும் வாராந்த மற்றும் மாதாந்தக் குலுக்கல்களில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு கிடைக்கும்.
முதல் குலுக்கல் ஒக்டோபர் 27
ஒக்டோபர் 27ஆம் திகதி நடைபெறவுள்ள முதல் குலுக்கலில், செப்டெம்பர் மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிவர்த்தனைகளுக்கான நான்கு வாராந்தக் குலுக்கல்களும் ஒரு மாதாந்தப் பிரதான குலுக்கலும் இடம்பெறவுள்ளன.
அதன் பின்னர், ஒவ்வொரு மாதத்திற்குமான வாராந்த மற்றும் மாதாந்தக் குலுக்கல்கள் அடுத்த மாதத்தில் நடத்தப்படும்.
வெற்றியாளர்களுக்கான பணப்பரிசுகள் அவர்களது வங்கிக் கணக்குகளில் நேரடியாக வைப்புச் செய்யப்படும் என GovTech தெரிவித்துள்ளது.
இந்தக் குலுக்கல்கள் LankaPay நிறுவனத்தினால் நடத்தப்படவுள்ளதுடன், பங்கேற்கும் வங்கிகளிடமிருந்து பெறப்படும் பரிவர்த்தனைத் தரவுகளின் அடிப்படையில் GovTech நிறுவனத்தின் ஆதரவுடன் முன்னெடுக்கப்படும்.
மேலும், டிஜிட்டல் பொருளாதார அமைச்சு, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு, இலங்கை மத்திய வங்கி மற்றும் கணக்காய்வாளர் நாயகம் திணைக்களம் ஆகியவற்றின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய விசேட குலுக்கல் குழுவொன்று இந்தச் செயற்பாடுகளைக் கண்காணிக்கவுள்ளது.
ஒவ்வொரு குலுக்கலும் நிறைவடைந்த இரண்டு வாரங்களுக்குள் வெற்றியாளர்கள் தொடர்பான அறிவிப்புகள் அவர்களது வங்கிகள் ஊடாக வெளியிடப்படும். பரிசுகள் வழங்கப்படும் விபரங்கள் டிஜிட்டல் பொருளாதார அமைச்சு மற்றும் GovTech நிறுவனத்தின் ஊடாக அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.