19 வயது இளைஞரின் இதயத்தால் உயிர் பிழைத்த 14 வயது சிறுவன்!
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 14 வயது சிறுவனுக்கு வெற்றிகரமாக இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
விபத்தில் சிக்கி மூளைச்சாவடைந்த 19 வயது இளைஞர் ஒருவரின் இதயம், குறித்த சிறுவனுக்குப் பொருத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த நவம்பர் 26ஆம் திகதி இந்த அறுவை சிகிச்சை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதய மற்றும் மார்பு அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர் அனில் அபேவிக்ரம தலைமையிலான விசேட மருத்துவக் குழுவினர் இந்தச் சிகிச்சையை மேற்கொண்டுள்ளனர்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இதய சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த குறித்த சிறுவனின் இதயம் மிகவும் பலவீனமடைந்திருந்ததாகவும், இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படாவிட்டால் இன்னும் சில நாட்களில் உயிரிழக்கும் அபாயம் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், விபத்தில் சிக்கி மூளைச்சாவடைந்த 19 வயது இளைஞர் ஒருவர் கம்பஹா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரது இதயத்தைத் தானமாக வழங்குவதற்கு குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, குறித்த இதயத்தை அவசரமாக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்குக் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஆரம்பத்தில் ஹெலிகொப்டர் மூலம் இதயத்தைக் கொண்டு செல்லத் திட்டமிடப்பட்டிருந்த போதிலும், கம்பஹா பகுதியில் நிலவிய சீரற்ற காலநிலை மற்றும் கடும் மழை காரணமாக அந்தத் திட்டம் பாதிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, பொலிஸாரின் உதவியுடன் வீதி மார்க்கமாக இதயத்தைக் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன்போது, கம்பஹாவிலிருந்து கொழும்பு வரையான பிரதான வீதியில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, விசேட பொலிஸ் பாதுகாப்புடன் இதயம் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டது.
மாலை 5 மணியளவில் ஆரம்பமான அறுவை சிகிச்சை நள்ளிரவு வரை சுமார் ஏழு மணித்தியாலங்களுக்கும் மேலாக இடம்பெற்றுள்ளது.
அறுவை சிகிச்சையைத் தொடர்ந்து சிறுவனின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் முதலாவது இதய மாற்று அறுவை சிகிச்சை சில ஆண்டுகளுக்கு முன்னர் கண்டி வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போதைய அறுவை சிகிச்சை இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட மூன்றாவது இதய மாற்று அறுவை சிகிச்சையாகக் கருதப்படுகிறது.