இலங்கையின் அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் ரூ. 27.5 பில்லியன் வருமானம்!
இலங்கையின் அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் 2025 ஜனவரி முதல் 2026 ஒக்டோபர் 31ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 27,581.4 மில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று (28) நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
இதன்படி, குறித்த காலப்பகுதியில் அதிகூடிய வருமானத்தை தெற்கு அதிவேக நெடுஞ்சாலை பதிவு செய்துள்ளது. கொட்டாவை முதல் மத்தளை வரையான இந்த நெடுஞ்சாலை மூலம் 11,486 மில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.
அதேவேளை, மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகம – குருநாகல் பகுதி மூலம் 7,282 மில்லியன் ரூபாயும், வெளிவட்ட அதிவேக நெடுஞ்சாலை மூலம் 6,251 மில்லியன் ரூபாயும் வருமானமாகப் பெறப்பட்டுள்ளன.
மேலும், பேலியகொடை – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை மூலம் 2,560.05 மில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.
தெற்கு, மத்திய மற்றும் பேலியகொடை – கட்டுநாயக்க ஆகிய மூன்று அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் மாத்திரம் மொத்தமாக 21,329 மில்லியன் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
**மத்திய அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணப் பணிகள்**
இதற்கிடையில், மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் கடவத்தை – மீரிகம பகுதி ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள காலக்கெடுவுக்குள் நிறைவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இந்தப் பகுதி மூன்று கட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கடவத்தை – கொசின்ன பகுதி 2028 மார்ச் மாதத்திற்குள்ளும், கொசின்ன – மீரிகம பகுதி 2028 செப்டெம்பர் மாதத்திற்குள்ளும், கடவத்தை பரிமாற்று மையம் (Interchange) 2027 ஜனவரி மாதத்திற்குள்ளும் நிறைவு செய்யப்படவுள்ளன.
அத்துடன், மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் பொத்துஹெர – கலகெதர பகுதி இரண்டு கட்டங்களாக நிர்மாணிக்கப்படுகின்றது. இதன் முதற்கட்டப் பணிகள் 2027 மே 31ஆம் திகதிக்குள்ளும், இரண்டாம் கட்டப் பணிகள் 2029 மே 17ஆம் திகதிக்குள்ளும் நிறைவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளன.
குருநாகல் – தம்புள்ளை பகுதியும் இரண்டு கட்டங்களாக நிர்மாணிக்கப்படவுள்ளதுடன், அதன் முதற்கட்டப் பணிகளை 2030 ஜூன் 1ஆம் திகதிக்குள் நிறைவு செய்ய எதிர்பார்க்கப்படுகின்றது.
எனினும், கலேவெல – தம்புள்ளை பகுதிக்கான நிர்மாணப் பணிகள் இதுவரை ஆரம்பிக்கப்படவில்லை என்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.