கறுப்பு ஜூலை வன்முறைகள் குறித்து ஆராய 43 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடாளுமன்றத் தெரிவுக்குழு நியமனம்!
1983ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற கறுப்பு ஜூலை வன்முறைகள் மற்றும் அதன் தாக்கங்கள் குறித்து விரிவான ஆய்வுகளை மேற்கொள்வதற்காக விசேட நாடாளுமன்றத் தெரிவுக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா போல் ராஜ் தலைமையில் இந்தத் தெரிவுக்குழு நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன இன்று (28) நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
1983ஆம் ஆண்டு இடம்பெற்ற வன்முறைகளின் தாக்கங்கள் குறித்து விரிவாக ஆராய்ந்து, அது தொடர்பான முழுமையான அறிக்கையொன்றை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதே இந்தக் குழுவின் முக்கிய பொறுப்பாகும்.
அத்துடன், தேசிய நல்லிணக்கத்தையும் இனங்களுக்கிடையிலான சகவாழ்வையும் வலுப்படுத்துவதற்கான முன்மொழிவுகள் மற்றும் பரிந்துரைகளை முன்வைப்பதுடன், வன்முறைகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பான நடவடிக்கைகளையும் இந்தக் குழு ஆராயவுள்ளது.
அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சி ஆகிய இரு தரப்பினரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் இந்தத் தெரிவுக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
**கறுப்பு ஜூலை வன்முறைகள்**
1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் தமிழர்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளே கறுப்பு ஜூலை என அழைக்கப்படுகின்றன.
இந்த வன்முறைகளின்போது பெருமளவிலான தமிழர்கள் கொல்லப்பட்டதுடன், சொத்துக்கள் அழிக்கப்பட்டு ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்தனர்.
இலங்கையின் பல தசாப்தகால உள்நாட்டுப் போருக்கு முக்கிய திருப்புமுனையாக இந்தச் சம்பவங்கள் கருதப்படுகின்றன.
நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் உறுப்பினர்கள்:
1. அமைச்சர் சரோஜா போல் ராஜ் – தலைவர்
2. அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார
3. பிரதி அமைச்சர் எரங்க குணசேகர
4. பிரதி அமைச்சர் முனீர் முலாபர்
5. நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன்
6. நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்
7. நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன்
8. நாடாளுமன்ற உறுப்பினர் கிருஷ்ணன் கலைச்செல்வி
9. நாடாளுமன்ற உறுப்பினர் தனுர திஸாநாயக்க
10. நாடாளுமன்ற உறுப்பினர் சேன நாணயக்கார
11. நாடாளுமன்ற உறுப்பினர் சுரங்க ரத்நாயக்க