தென் கொரிய விபத்தில் உயிரிழந்த இரு இலங்கையர்களும் அடையாளம் காணப்பட்டனர்!
தென் கொரியாவில் கடந்த வியாழக்கிழமை (26) இடம்பெற்ற வீதி விபத்தில் உயிரிழந்த இரண்டு இலங்கையர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சியோலில் உள்ள இலங்கைத் தூதரகம் உயிரிழந்தவர்களின் விபரங்களை வெளியிட்டுள்ளது.
இதன்படி, கோதகாவெல, ரன்வல பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய தெஹிபிட்டிய விதானலாகே அனில் குமார விஜேரத்ன மற்றும் வலப்பனை, ஹல்கிரனோயா பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய மகேஷ்வரன் பிரசாந்தன் ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.
தென் கொரியாவின் ஹ்வாசோங் நகரில் உள்ள ஜங்கான்-மியோன் பகுதியில் கடந்த 26ஆம் திகதி இரவு சுமார் 9 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர்களின் சடலங்களை இலங்கைக்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் வகையில், அவர்களது குடும்பத்தினர், இலங்கை வெளிவிவகார அமைச்சு மற்றும் தென் கொரிய அதிகாரிகளுடன் இணைந்து செயற்பட்டு வருவதாக இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.
மேலும், சடலங்களை நாட்டுக்குக் கொண்டுவரும் நடவடிக்கைகளை இலகுபடுத்துவதற்காக, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரால் தென் கொரியாவில் நியமிக்கப்பட்டுள்ள இரண்டு இலங்கையர்களுடனும் தூதரகம் தொடர்புகளைப் பேணி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.