கினிகத்தேனையில் பேருந்தின் மீது பாறை விழுந்து பயணி ஒருவர் உயிரிழப்பு!
ஹட்டனில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் (SLTB) சொந்தமான பேருந்தின் மீது மலைப்பகுதியிலிருந்து உருண்டு வந்த பாரிய பாறை விழுந்ததில் பயணி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று (28) பிற்பகல் சுமார் 2.30 மணியளவில் கினிகத்தேனை, கலுகல பொலிஸ் சோதனைச் சாவடிக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மலைப்பகுதியிலிருந்து உருண்டு வந்த பாறை பேருந்தின் மீது மோதியதுடன், பேருந்துக்குள் அமர்ந்திருந்த பயணி ஒருவர் மீது விழுந்துள்ளது. இதனால் அவர் பலத்த காயமடைந்த நிலையில் கினிகத்தேனை பிராந்திய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எனினும், வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தப் பாறை விழுந்ததில் பேருந்தும் பலத்த சேதமடைந்துள்ளது.
அண்மைய நாட்களாகப் பெய்து வரும் கடும் மழை காரணமாகவே மலைப்பகுதியிலிருந்து பாறை உருண்டு விழுந்திருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
உயிரிழந்தவர் அகரபத்தனைப் பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.