‘ஸ்டார் ட்ரெக்’ புகழ் நடிகர் பேட்ரிக் ஸ்டீவர்ட் காலமானார்!

arvloshan.com

பிரபல அறிவியல் புனைகதைத் தொடரான ‘ஸ்டார் ட்ரெக்’ (Star Trek) மூலம் உலகப் புகழ்பெற்ற பிரித்தானிய நடிகரும் இயக்குநருமான பேட்ரிக் ஸ்டீவர்ட் (Patrick Stewart), தனது 86ஆவது வயதில் காலமானார்.

அல்சைமர் நோய் (Alzheimer’s disease) மற்றும் லூயி பாடி டிமென்ஷியா (Lewy body dementia) ஆகிய நோய்களுடன் குறுகிய காலம் போராடிய நிலையில், வியாழக்கிழமை அவர் உயிரிழந்ததாக அவரது அதிகாரபூர்வ சமூக ஊடகக் கணக்குகளில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடக மேடை, தொலைக்காட்சி மற்றும் திரைப்பட உலகில் நீண்டகாலமாகப் புகழ்பெற்று விளங்கிய அவர், குறிப்பாக ‘ஸ்டார் ட்ரெக்: தி நெக்ஸ்ட் ஜெனரேஷன்’ (Star Trek: The Next Generation) தொடரில் கேப்டன் ஜீன்-லூக் பிகார்ட் (Jean-Luc Picard) கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் உலகளாவிய ரசிகர்களைப் பெற்றார்.

கேப்டன் பிகார்டாக உலகப் புகழ்

இங்கிலாந்தின் மிர்ஃபீல்ட் (Mirfield) என்ற சிறிய கிராமத்தில் பிறந்த பேட்ரிக் ஸ்டீவர்ட், தனது 47ஆவது வயதில் ‘ஸ்டார் ட்ரெக்’ தொடரில் கேப்டன் பிகார்ட் கதாபாத்திரத்தை ஏற்றார்.

ஏற்கெனவே வில்லியம் ஷாட்னர் (William Shatner) நடித்த கேப்டன் ஜேம்ஸ் டி. கிர்க் கதாபாத்திரத்தால் புகழ்பெற்றிருந்த ‘ஸ்டார் ட்ரெக்’ உலகில், புதிய தலைமுறைக்கான முக்கிய கதாபாத்திரமாக பிகார்டை ஸ்டீவர்ட் உருவாக்கினார்.

அமைதியான அணுகுமுறை, நிதானமான பேச்சு மற்றும் தனித்துவமான பிரித்தானிய உச்சரிப்பு ஆகியவற்றின் மூலம் கேப்டன் பிகார்ட் கதாபாத்திரத்துக்கு அவர் உயிரூட்டினார். இதனால், அந்தக் கதாபாத்திரம் ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், ‘ஸ்டார் ட்ரெக்’ உலகின் அடையாளங்களில் ஒன்றாகவும் மாறியது.

‘என்டர்பிரைஸ்’ (Enterprise) விண்கலத்தின் தலைவராக அவர் நடித்த இந்தத் தொடரில், புதிய உலகங்களை ஆராய்வதும், புதிய உயிரினங்களையும் நாகரிகங்களையும் கண்டறிவதும் முக்கிய கருப்பொருள்களாக அமைந்தன.

1994ஆம் ஆண்டு ‘ஸ்டார் ட்ரெக்: தி நெக்ஸ்ட் ஜெனரேஷன்’ தொடர் நிறைவடைந்த பின்னரும், பல ஆண்டுகளுக்குப் பிறகு ‘ஸ்டார் ட்ரெக்: பிகார்ட்’ (Star Trek: Picard) என்ற தனித் தொடரில் மீண்டும் அதே கதாபாத்திரத்தில் நடித்தார். இந்தத் தொடர் 2023ஆம் ஆண்டு நிறைவடைந்தது.

தொலைக்காட்சித் தொடருக்கு மேலதிகமாக, ‘ஸ்டார் ட்ரெக்’ திரைப்படங்களிலும் அவர் நடித்திருந்தார்.

ஷேக்ஸ்பியர் நாடகங்களில் தனி முத்திரை

நடிப்புத் துறையில் பேட்ரிக் ஸ்டீவர்ட்டுக்கு ஆர்வம் ஏற்பட்டது 1950களின் தொடக்கத்தில். அப்போது அவரது ஆசிரியர் ஒருவர், வில்லியம் ஷேக்ஸ்பியரின் படைப்பொன்றை வாசித்துக் காட்டுமாறு கேட்டுக்கொண்டது அவரது நடிப்பு ஆர்வத்துக்கு அடித்தளமிட்டது.

தனது 12ஆவது வயதிலேயே நடிக்கத் தொடங்கிய அவர், 16 வயதில் பாடசாலைக் கல்வியை இடைநிறுத்திவிட்டு, உதவித்தொகையின் மூலம் இங்கிலாந்தின் பிரிஸ்டலில் நடிப்புப் பயிற்சி பெற்றார். ஆரம்பகாலத்தில் பத்திரிகையாளராகவும் பணியாற்றினார்.

1965ஆம் ஆண்டு ரோயல் ஷேக்ஸ்பியர் நிறுவனத்தில் (Royal Shakespeare Company) இணைந்த அவர், 1966 முதல் 1982ஆம் ஆண்டு வரை அந்த நாடக நிறுவனத்துடன் பணியாற்றினார். ஷேக்ஸ்பியரின் படைப்புகள் மீதான அவரது ஆர்வம் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்தது.

சார்ல்ஸ் டிக்கன்ஸ் எழுதிய ‘எ கிறிஸ்மஸ் கரோல்’ (A Christmas Carol) என்ற புகழ்பெற்ற கதையைத் தனிநபர் நாடகமாக மேடையேற்றியதும் அவரது கலைப் பயணத்தின் முக்கிய மைல்கல்லாக அமைந்தது.

இந்த நாடகத்தில் 30க்கும் மேற்பட்ட கதாபாத்திரங்களை அவரே ஏற்று நடித்தார். 1987ஆம் ஆண்டு அவரது சொந்த ஊரான மிர்ஃபீல்டில் முதன்முதலில் அரங்கேற்றப்பட்ட இந்த நாடகம், பின்னர் நியூயோர்க்கின் பிராட்வே மேடையிலும் பெரும் வரவேற்பைப் பெற்றது.

ஹொலிவூட் வாய்ப்பும் ஏழு பருவங்களும்

1987ஆம் ஆண்டில் ‘ஸ்டார் ட்ரெக்: தி நெக்ஸ்ட் ஜெனரேஷன்’ தொடரில் நடிப்பதற்கான வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. அந்தத் தொடரின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ரொபர்ட் ஜஸ்ட்மன் (Robert Justman), கேப்டன் ஜீன்-லூக் பிகார்ட் கதாபாத்திரத்துக்கு அவரைத் தேர்ந்தெடுத்தார்.

அதுவரை ஹொலிவூட்டில் பணியாற்றிய அனுபவம் இல்லாததால், ஆரம்பத்தில் இந்த வாய்ப்பை ஏற்றுக்கொள்வதில் ஸ்டீவர்ட் தயக்கம் காட்டினார். இருப்பினும், அவரது முகவரின் ஊக்குவிப்பைத் தொடர்ந்து அவர் அந்த வாய்ப்பை ஏற்றுக்கொண்டார்.

அவரது தயக்கத்துக்கு மாறாக, இந்தத் தொடர் உலகளாவிய வெற்றியைப் பெற்றது. ஏழு பருவங்களைக் கொண்ட தொலைக்காட்சித் தொடரிலும், நான்கு முழுநீளத் திரைப்படங்களிலும் அவர் கேப்டன் பிகார்டாக நடித்தார்.

ஆரம்பத்தில், அமெரிக்க விண்கலத்தின் தலைவராகப் பிரித்தானிய உச்சரிப்பைக் கொண்ட நடிகர் பொருத்தமாக இருப்பாரா என்ற கேள்விகள் எழுந்தன. எனினும், அவரது நடிப்புத் திறனும் கதாபாத்திரத்தின் மீதான ஆளுமையும் அந்தச் சந்தேகங்களை விரைவில் மறக்கச் செய்தன.

ஷேக்ஸ்பியர் நாடகங்களில் பெற்ற அனுபவம், கேப்டன் பிகார்ட் கதாபாத்திரத்தைச் சிறப்பாக வெளிப்படுத்த உதவியதாக அவர் முன்னர் குறிப்பிட்டிருந்தார்.

தனிப்பட்ட வாழ்க்கையில் எதிர்கொண்ட சவால்கள்

ஸ்டீவர்ட்டின் வாழ்க்கை முழுவதும் கலைத்துறை வெற்றிகள் மட்டுமே நிறைந்திருக்கவில்லை.

இரண்டாம் உலகப் போரின்போது பிரித்தானிய இராணுவத்தில் பணியாற்றிய அவரது தந்தை, குடும்ப வாழ்க்கையில் வன்முறையில் ஈடுபட்டதாக ஸ்டீவர்ட் தெரிவித்துள்ளார். தனது சிறுவயதில் தாயார் குடும்ப வன்முறைக்கு உள்ளாவதைப் பார்த்த அனுபவங்களையும் அவர் பகிர்ந்திருந்தார்.

2009ஆம் ஆண்டு ‘தி கார்டியன்’ பத்திரிகையில் எழுதிய கட்டுரையொன்றில், குடும்ப வன்முறையுடனான தனது அனுபவங்களை அவர் வெளிப்படுத்தினார். அத்தகைய சூழலில் இருந்து விலகி, தனக்குப் பாதுகாப்பான இடமாக நடிப்பு மேடை அமைந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த அனுபவங்கள் பின்னாளில் பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு எதிராகக் குரல் கொடுப்பதிலும், மனித உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் அவர் ஈடுபடுவதற்கான பின்னணிகளில் ஒன்றாக அமைந்தன.

2010இல் பிரபுப் பட்டம்

நடிப்புத் துறையில் அவர் ஆற்றிய பங்களிப்புகளுக்காக, 2010ஆம் ஆண்டு பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தினால் ஸ்டீவர்ட்டுக்கு ‘நைட்’ (Knight) பட்டம் வழங்கப்பட்டது.

லோரன்ஸ் ஒலிவியே (Laurence Olivier), அலெக் கின்னஸ் (Alec Guinness) போன்ற புகழ்பெற்ற நடிகர்களுடன் இந்தக் கௌரவத்தைப் பகிர்ந்துகொள்வது தனது கலைவாழ்வின் மிகப்பெரிய பெருமை என அவர் குறிப்பிட்டிருந்தார்.

நடிப்புக்கு அப்பால், வயது அடிப்படையிலான பாகுபாடு, சிறுவர் பாதுகாப்பு மற்றும் சமூக உரிமைகள் போன்ற விடயங்கள் தொடர்பிலும் அவர் தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தார்.

ஓய்வுபெற மறுத்த கலைஞர்

2020ஆம் ஆண்டு இடம்பெற்ற நேர்காணலொன்றில், நடிப்பிலிருந்து ஓய்வுபெறுவது குறித்து கேட்கப்பட்டபோது, “ஒருபோதும் இல்லை! அது எனது வாழ்க்கையைக் கைவிடுவதற்குச் சமம்” என்ற பொருள்பட அவர் பதிலளித்திருந்தார்.

அந்தக் காலப்பகுதியில் ‘ஸ்டார் ட்ரெக்: பிகார்ட்’ தொடரின் இரண்டாவது பருவத்துக்கான படப்பிடிப்பிலும் அவர் ஈடுபட்டிருந்தார்.

இந்தத் தொடரில், விண்வெளிப் படையிலிருந்து ஓய்வுபெற்ற பிகார்ட், பிரான்ஸில் உள்ள தனது குடும்பத் திராட்சைத் தோட்டத்தில் வாழ்ந்தாலும், புதிய அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்காக மீண்டும் விண்வெளிக்குத் திரும்பும் கதைக்களம் இடம்பெற்றது.

விலங்குகள் மீதான அவரது அன்பும் பலரது கவனத்தை ஈர்த்தது. குறிப்பாக, பிட்புல் (Pit Bull) நாய்கள் மீதான பாகுபாட்டுக்கு எதிராகவும், அவற்றைத் தத்தெடுப்பதை ஊக்குவிப்பதிலும் அவர் ஈடுபட்டார்.

அவரது செல்ல நாயான ஜிஞ்சர் (Ginger) மீதான அன்பின் தாக்கம், ‘ஸ்டார் ட்ரெக்: பிகார்ட்’ தொடரிலும் இடம்பெற்றது. அதில் பிகார்டின் விசுவாசமான பிட்புல் நாய்க்கு ‘நம்பர் ஒன்’ (Number One) எனப் பெயரிடப்பட்டிருந்தது.

விலங்கு நலனுக்காக அவர் மேற்கொண்ட முயற்சிகளுக்காக, அமெரிக்க விலங்கு நல அமைப்பான ASPCA உள்ளிட்ட அமைப்புகளிடமிருந்தும் கௌரவங்களைப் பெற்றிருந்தார்.

2024ஆம் ஆண்டு தனது சுயசரிதையான ‘மேக்கிங் இட் சோ’ (Making It So) நூலை வெளியிட்ட அவர், அதில் தனது நாடகப் பயணம், ஷேக்ஸ்பியர் மீதான காதல் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை அனுபவங்கள் குறித்து விரிவாகப் பதிவு செய்திருந்தார்.

பல தசாப்தங்களாக நாடக மேடை முதல் அறிவியல் புனைகதைத் திரைப்படங்கள் வரை தனது நடிப்புத் திறமையால் ரசிகர்களைக் கவர்ந்த பேட்ரிக் ஸ்டீவர்ட்டின் மறைவு, உலகெங்கிலும் உள்ள ‘ஸ்டார் ட்ரெக்’ ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேப்டன் பிகார்ட் என்ற கதாபாத்திரத்தின் மூலம் பல தலைமுறை ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த பேட்ரிக் ஸ்டீவர்ட்டின் கலைப் பயணம், அவரது மறைவுக்குப் பின்னரும் நினைவுகூரப்படும்.


ஏனைய செய்திகள்

arvoshan.com

ஏ.ஐ. மூலம் போலி வீடியோ: நடிகை சுனைனா கடும் கண்டனம்

...

arvoshan.com

‘தத் த்வம் அஸி’ படத்தின் தலைப்பு ‘மணிகண்டா’ என மாற்றம்!

...

arvoshan.com

கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகும் ‘தர்மன்’ – ரஜினிகாந்துடன் மீண்டும் இணையும் நயன்தாரா!

...

arvoshan.com

கோவையில் நடிகை த்ரிஷாவின் ரோடு ஷோ – ரசிகர்கள் கூட்டம் அலைமோதல்!

...

arvoshan.com

‘ஓம்: சாப்டர் 1’ – சாய் பல்லவியின் கதாபாத்திர அறிமுக வீடியோ வெளியீடு!

...

arvoshan.com

தமிழ் சினிமாவில் புதிய வசூல் சாதனை – ரூ.710 கோடியைக் கடந்த ‘ஜெயிலர் 2’

...

arvoshan.com

40 ஆண்டுகளுக்குப் பிறகு ரசிகர்களுடன் ‘ஜெயிலர் 2’ பார்த்த ரஜினிகாந்த்!

...

arvoshan.com

குடும்பத் திரில்லர் கதையில் சசிகுமார் – சென்னையில் படப்பிடிப்பு ஆரம்பம்!

...

arvoshan.com

பிரபல பின்னணிப் பாடகர் கிருஷ்ணராஜ் காலமானார்!

...

arvoshan.com

அமிதாப், அமீர் கான், கங்கணா உள்ளிட்ட பாலிவுட் நட்சத்திரங்களுக்குக் குறிவைக்கும் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல்?

...

arvoshan.com

டெல்லியில் முகாமிட்டிருக்கும் நடிகர் தனுஷ்: அரசியல் வருகை குறித்து ஆலோசனையா?

...

arvoshan.com

சந்தானத்தின் 20-ஆவது படத்துக்கு ‘அதிசய பிறவி’ எனத் தலைப்பு அறிவிப்பு!

...

arvoshan.com

‘ஸ்லம்டாக் 33 டெம்பிள் ரோடு’ படப்பிடிப்பு நிறைவு!

...

arvoshan.com

“திரைப்படங்கள் மூலம் சமூகத்தில் நல்ல மாற்றம் உருவாக வேண்டும்” – இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்

...

arvoshan.com

இசையமைப்பாளர் தேவாவின் இறுதிச் சடங்கு – தமிழக அரசு சார்பில் முழு அரசு மரியாதை

...