ஏ.ஐ. மூலம் போலி வீடியோ: நடிகை சுனைனா கடும் கண்டனம்
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தனது முகத்தை ஆபாசமான காணொளியில் இணைத்துப் போலியான வீடியோ உருவாக்கிப் பரப்பியமைக்கு நடிகை சுனைனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
திரையுலகப் பிரபலங்களின் முகம் மற்றும் குரலைச் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் தவறாகப் பயன்படுத்தும் சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றன. இதற்கு முன்னர் நடிகைகள் ராஷ்மிகா மந்தனா, கீர்த்தி சுரேஷ், ஜான்வி கபூர் உள்ளிட்ட பலர் இத்தகைய போலி காணொளிகளால் பாதிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், நடிகை சுனைனாவின் முகத்தைப் பயன்படுத்தி ஆபாசமான உள்ளடக்கத்துடன் போலியான காணொளி உருவாக்கப்பட்டு பரப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாகத் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ள சுனைனா, செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி தனது முகத்தை ஆபாசமான உள்ளடக்கத்தில் இணைத்து உருவாக்கப்பட்ட காணொளி ஒன்று பரவி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அந்தக் காணொளியில் தன்னைப் போன்ற தோற்றம் கொண்ட ஒருவர் சித்தரிக்கப்பட்டுள்ளதாகவும், குறித்த காணொளி முற்றிலும் பொய்யானது, தவறானது மற்றும் ஆதாரமற்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இத்தகைய இழிவான செயல் தனக்கு மிகுந்த அதிர்ச்சியையும் அருவருப்பையும் ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், இதனை வன்மையாகக் கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், இத்தகைய செயல் பாலியல் துன்புறுத்தலுக்கு இணையானது என்றும், அவதூறு ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாகவும் சுனைனா சுட்டிக்காட்டியுள்ளார். இவ்வாறான நடவடிக்கைகள் இந்தியச் சட்டங்களின்படி குற்றமாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, குறித்த போலி காணொளியை உருவாக்கியவர்கள், பதிவேற்றியவர்கள் மற்றும் பகிர்ந்தவர்கள் உடனடியாக அதனைப் பரப்புவதை நிறுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், இந்தக் காணொளியை உருவாக்கியவர்கள் மற்றும் அதனை வெளியிட்டுப் பரப்பியவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் நடிகை சுனைனா எச்சரித்துள்ளார்.