40 ஆண்டுகளுக்குப் பிறகு ரசிகர்களுடன் ‘ஜெயிலர் 2’ பார்த்த ரஜினிகாந்த்!
நடிகர் ரஜினிகாந்த், சுமார் 40 ஆண்டுகளுக்குப் பிறகு தனது படத்தை ரசிகர்களுடன் திரையரங்கில் அமர்ந்து பார்த்துள்ளார். இந்த அரிய நிகழ்வு தொடர்பான காணொளியை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
குறித்த பதிவில், “40 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக ரஜினிகாந்த் ரசிகர்களுடன் இணைந்து ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தை வெள்ளித்திரையில் கண்டு ரசிக்கிறார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளியிடப்பட்டுள்ள காணொளியில், ஐமேக்ஸ் திரையரங்கின் வாகன நிறுத்துமிடத்துக்கு காரில் வந்து இறங்கும் ரஜினிகாந்த், பின்னர் திரையரங்குக்குள் நுழைந்து ரசிகர்களுடன் அமர்ந்து படத்தைப் பார்க்கிறார். அவருடன் படத்தின் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோரும் காணப்படுகின்றனர்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம், கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான ‘ஜெயிலர்’ படத்தின் தொடர்ச்சியாக வெளியாகியுள்ளது. கடந்த ஒக்டோபர் 15ஆம் திகதி திரையரங்குகளில் வெளியான இத்திரைப்படம், தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இப்படத்தில் ரஜினிகாந்துடன் ரம்யா கிருஷ்ணன், நமோ நாராயணன், சுராஜ் வெஞ்சரமூடு, யோகி பாபு, வித்யா பாலன், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
திரையரங்குகளில் வெளியான ஒன்பது நாட்களில் உலகளவில் 628.05 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், முதல் பாகமான ‘ஜெயிலர்’ திரைப்படத்தின் மொத்த வசூலான 604.74 கோடி ரூபாயையும் ‘ஜெயிலர் 2’ முறியடித்துள்ளது.
மேலும், ‘2.0’, ‘லியோ’, ‘ஜெயிலர்’ ஆகிய திரைப்படங்களைத் தொடர்ந்து, உலகளவில் 600 கோடி ரூபாய் வசூலைக் கடந்த நான்காவது தமிழ்த் திரைப்படம் என்ற பெருமையையும் ‘ஜெயிலர் 2’ பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.