கோவையில் நடிகை த்ரிஷாவின் ரோடு ஷோ – ரசிகர்கள் கூட்டம் அலைமோதல்!
கோவை காந்திபுரத்தில் புதிய செல்போன் கடையொன்றைத் திறந்து வைப்பதற்காக வருகை தந்த நடிகை த்ரிஷாவைக் காண்பதற்காக ரசிகர்களும் பொதுமக்களும் பெருமளவில் திரண்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை காந்திபுரம் நூறடி சாலையில் அமைந்துள்ள குறித்த செல்போன் கடையை நடிகை த்ரிஷா நேற்று முன்தினம் திறந்து வைத்தார். இதையொட்டி, அவர் கோவை விமான நிலையத்திற்கு வந்தபோது, செய்தியாளர்கள் அவரிடம் அரசியலுக்கு வருவது குறித்து கேள்வி எழுப்பினர். எனினும், அவர் அதற்குப் பதிலளிக்காமல் அங்கிருந்து சென்றார்.
த்ரிஷாவின் வருகையை முன்னிட்டு, காந்திபுரம் நூறடி சாலையில் ஏராளமான ரசிகர்களும் பொதுமக்களும் திரண்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன், கடையின் முன்பாகவும் பெரும் கூட்டம் காணப்பட்டது.
ரசிகர்கள் த்ரிஷாவைக் காண்பதற்காக முண்டியடித்ததால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. இதையடுத்து, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸாரும் த்ரிஷாவின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்ட பவுன்சர்களும் ரசிகர்களைக் கட்டுப்படுத்தினர்.
கடைத் திறப்பு விழா நிறைவடைந்த பின்னர், காரில் ஏறிய த்ரிஷா, அங்கிருந்த ரசிகர்களைப் பார்த்துக் கையசைத்து மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டார். மேலும், சில ரசிகர்களுடன் கைகுலுக்கியும் உற்சாகப்படுத்தினார்.
தொடர்ந்து, ரசிகர்கள் மத்தியில் பேசுவதற்கு அவர் முயன்றபோதிலும், ஒலிவாங்கி செயல்படாததால் அவரால் பேச முடியவில்லை. பின்னர், காரில் சிறிது தூரம் பயணித்து ரோடு ஷோவில் ஈடுபட்ட அவர், ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.
நடிகை த்ரிஷாவின் இந்த ரோடு ஷோ தொடர்பான காணொளிகள் தற்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகின்றன.