வெறிநாய்த் தடுப்பு மற்றும் நாய்களைப் பதிவு செய்யும் சட்டமூலத்திற்கு நாடாளுமன்றக் குழு அனுமதி!
இலங்கையில் வெறிநாய்த் தொற்றை ஒழிப்பதையும், நாய்களைப் பதிவு செய்வதையும் நோக்கமாகக் கொண்ட வெறிநாய்த் தடுப்பு மற்றும் நாய்கள் பதிவு சட்டமூலத்திற்கு, சில திருத்தங்களுடன் ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழு அனுமதி வழங்கியுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் நஜித் இந்திக்க தலைமையில் கடந்த செவ்வாய்க்கிழமை (20) நாடாளுமன்றத்தில் நடைபெற்ற குழுக் கூட்டத்தின்போதே இந்தச் சட்டமூலம் ஆராயப்பட்டு, திருத்தங்களுடன் அங்கீகரிக்கப்பட்டது.
நாய்களுக்கு தடுப்பூசி செலுத்துதல், நாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துதல் மற்றும் வணிக நோக்கில் நாய்களை இனப்பெருக்கம் செய்வதை ஒழுங்குபடுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் ஊடாக இலங்கையில் வெறிநாய்த் தொற்றை முற்றாக ஒழிப்பதே இந்தச் சட்டமூலத்தின் பிரதான நோக்கமாகும்.
மேலும், நாய்களை முறையாகப் பதிவு செய்தல், வெறிநாய்த் தொற்று ஒழிப்புக்கான தேசிய மற்றும் பிராந்திய ஆலோசனைக் குழுக்களை நிறுவுதல் ஆகியவற்றுக்கும் இந்தச் சட்டமூலம் வழிவகுக்கிறது. அத்துடன், தற்போது நடைமுறையில் உள்ள வெறிநாய்த் தொற்று கட்டளைச் சட்டம் மற்றும் நாய்கள் பதிவு கட்டளைச் சட்டம் ஆகியவற்றுக்குப் பதிலாகப் புதிய சட்டக் கட்டமைப்பை அறிமுகப்படுத்தவும் முன்மொழியப்பட்டுள்ளது.
தெருநாய்களுக்கு உதவுவோரின் பொறுப்புகள் குறித்து கவனம்
சட்டமூலம் தொடர்பான கலந்துரையாடலின்போது, நாய்களுக்கு முதலாவது வெறிநாய்த் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டிய வயது தொடர்பில் தெளிவான ஏற்பாடுகள் அவசியம் எனக் குழு சுட்டிக்காட்டியது.
குறிப்பாக, தெருநாய்களுக்கு உணவளித்தல், அவற்றைப் பராமரித்தல் மற்றும் மருத்துவ உதவிகளை வழங்குதல் போன்ற தன்னார்வச் செயற்பாடுகளில் ஈடுபடுவோரின் சட்டபூர்வமான பொறுப்புகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.
தெருநாய்களுக்கு உதவுகின்றனர் என்ற ஒரே காரணத்திற்காக, சம்பந்தப்பட்ட நபர்களை அந்த நாய்களின் சட்டபூர்வ உரிமையாளர்களாகக் கருதவோ, நாய் உரிமையாளர்களுக்குப் பொருந்தும் அனைத்து சட்டக் கடமைகளையும் அவர்கள் மீது சுமத்தவோ கூடாது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் திருத்தங்களை மேற்கொள்வது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
நாய்களின் கருத்தடை மற்றும் வணிக இனப்பெருக்க நிலையங்களுக்குக் கட்டுப்பாடுகள்
நாய்களுக்கான கருத்தடைச் சிகிச்சைகள், கால்நடை மருத்துவர்களின் மேற்பார்வையின் கீழ் அறுவைச் சிகிச்சை முறையில் மேற்கொள்ளப்பட வேண்டும் எனக் குழு வலியுறுத்தியது. ஹோர்மோன் ஊசிகள் உள்ளிட்ட மாற்று முறைகள் தொடர்பிலும் இதன்போது கவலைகள் முன்வைக்கப்பட்டன.
நாய்களைப் பதிவு செய்யத் தவறுவோருக்கான அபராதங்களைத் திருத்தியமைத்தல், வணிக நோக்கில் நாய்களை இனப்பெருக்கம் செய்யும் நிலையங்களுக்கான கட்டுப்பாடுகளை வலுப்படுத்துதல் மற்றும் விலங்குகள் மீதான கொடுமைகளைத் தடுப்பதற்குக் கடுமையான நடவடிக்கைகளை அறிமுகப்படுத்துதல் போன்ற முன்மொழிவுகளும் ஆராயப்பட்டன.
வெறிநாய்த் தொற்று ஏற்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் நாய்களைக் கையாளும்போது, உரிய கால்நடை மருத்துவ நடைமுறைகளைப் பின்பற்றுவதன் அவசியத்தையும் குழு வலியுறுத்தியது.
தேசிய மற்றும் பிராந்திய ஆலோசனைக் குழுக்களை நிறுவுவது குறித்தும் ஆராய்வு
வெறிநாய்த் தொற்றை ஒழிப்பதற்காக முன்மொழியப்பட்டுள்ள தேசிய மற்றும் பிராந்திய ஆலோசனைக் குழுக்களின் பொறுப்புகள், அவற்றின் செயற்பாடுகள் மற்றும் தொடர்புடைய நிறுவனங்களுடன் அவை ஒருங்கிணைந்து செயல்படும் முறைமை குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
குறித்த திருத்தங்களுடன் சட்டமூலத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், இலங்கையில் வெறிநாய்த் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கும் நாய்கள் தொடர்பான நடவடிக்கைகளைச் சட்டரீதியாக ஒழுங்குபடுத்துவதற்கும் இந்தச் சட்டமூலம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.