விசா காலாவதியான பின்னரும் நாட்டில் தங்கிய வழக்கு: டயானா கமகே குற்றத்தை ஒப்புக்கொண்டார்
முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே, செல்லுபடியாகும் விசா இன்றி இலங்கையில் தங்கியிருந்த குற்றச்சாட்டை கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார்.
குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
2015ஆம் ஆண்டு ஜூலை 17ஆம் திகதி முதல் 2016ஆம் ஆண்டு ஜூலை 16ஆம் திகதி வரையான காலப்பகுதியில் செல்லுபடியாகும் விசா இன்றி இலங்கையில் தங்கியிருந்தமை தொடர்பிலேயே அவருக்கு எதிராக இந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, அவருக்கான தண்டனை அறிவிப்பு ஜனவரி 17ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குடிவரவு மற்றும் குடியகல்வுச் சட்டத்தின் கீழ் டயானா கமகேவுக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID), சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய ஏற்கனவே ஏழு குற்றச்சாட்டுகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
செல்லுபடியாகும் விசா இன்றி பல்வேறு காலப்பகுதிகளில் இலங்கையில் தங்கியிருந்தமை மற்றும் இலங்கை கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக குடிவரவு மற்றும் குடியகல்வுக் கட்டுப்பாட்டாளர் நாயகத்துக்குப் பொய்யான தகவல்களை வழங்கியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அவற்றில் அடங்குகின்றன.
2025ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் வழக்கு விசாரணை ஆரம்பமானபோது, அவர் குற்றச்சாட்டுகளை நிராகரித்து குற்றமற்றவர் எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இலங்கைப் பிரஜாவுரிமை இல்லாத காரணத்தினால் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்கத் தகுதியற்றவர் எனத் தீர்மானித்து, 2024ஆம் ஆண்டு மே 8ஆம் திகதி உயர் நீதிமன்றம் வழங்கிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பைத் தொடர்ந்து இந்த சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
பிரித்தானியப் பிரஜையான டயானா கமகே, இதன் காரணமாக தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் பதவியையும் இழந்திருந்தார்.