ருவன்வெலிசாய மோதல்: வண. கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 11 பேருக்கு பிணை
அநுராதபுரம் ருவன்வெலிசாய வளாகத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த வண. பலாங்கொடை கஸ்ஸப தேரர், வண. ராஜாங்கனே சத்தாரதன தேரர் உள்ளிட்ட 11 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேகநபர்கள் இன்று (26) அநுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, அவர்களைப் பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த நவம்பர் 12ஆம் திகதி ருவன்வெலிசாய வளாகத்திற்கு அருகில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையைத் தொடர்ந்து இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
நீதிமன்ற உத்தரவை மீறி வண. பலாங்கொடை கஸ்ஸப தேரர் உள்ளிட்ட பிக்குகள் சிலர் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டிருந்தது.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் அநுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, இன்று (26) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், இன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அவர்களைப் பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.