மொரட்டுவையில் லொறியில் சிக்கி மூத்த சைக்கிள் வீரர் உயிரிழப்பு!
மொரட்டுவை, எகொட உயன பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 68 வயதுடைய மூத்த சைக்கிள் வீரரும் வர்த்தகருமான ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து சனிக்கிழமை (14) புதிய காலி வீதியில் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் மொரட்டுவை, லக்ஷபத்திய, டி மெல் வீதியைச் சேர்ந்த ஜான் பேர்னார்ட் இவோ ரணசூரிய என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவர் மொரட்டுவையில் பிரபலமான சைக்கிள் வீரராகவும், விளையாட்டுப் பொருட்கள் விற்பனை வர்த்தகராகவும் அறியப்பட்டவர். அத்துடன், மொரட்டுவை கிரிக்கெட் கடையின் உரிமையாளராகவும் செயற்பட்டு வந்துள்ளார்.
சம்பவத்தன்று காலை, மொரட்டுவையிலிருந்து பாணந்துறை நோக்கி சக சைக்கிள் வீரர்கள் குழுவுடன் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, பின்னால் வந்த பொருட்களை ஏற்றிச் செல்லும் லொறி ஒன்று அவர் பயணித்த பந்தய சைக்கிள் மீது மோதியுள்ளது.
இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்த அவர், லொறியின் சக்கரங்களுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இதற்கிடையில், விபத்தைத் தொடர்ந்து லொறிக்குள் சிக்கிக்கொண்ட அதன் சாரதியைப் பெரும் முயற்சிக்குப் பின்னர் பிரதேச மக்கள் மீட்டுள்ளனர்.
பலத்த காயமடைந்த லொறிச் சாரதி மேலதிக சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எகொட உயன பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.