புனர்வாழ்வளிக்கப்பட்ட 12,196 முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட உதவிகள் குறித்து அமைச்சர் விளக்கம்
புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்துடன் மீண்டும் இணைக்கப்பட்ட 12,196 முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் தொடர்பிலும், அவர்களுக்கு வழங்கப்பட்ட உதவிகள் குறித்தும் பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால விளக்கமளித்துள்ளார்.
இவர்கள் சமூகத்துடன் மீண்டும் இணைக்கப்பட்டு சுமார் 15 ஆண்டுகள் கடந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
2010ஆம் ஆண்டு காலப்பகுதியிலிருந்து இவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காகப் பல்வேறு கடன் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, சுயதொழில் முயற்சிகளை ஊக்குவிக்கும் நோக்கில் அதிகபட்சமாக 25,000 ரூபாய் வரை 4 சதவீத வட்டி அடிப்படையில் கடன் வழங்கப்பட்டதாகவும், முதலாம் ஆண்டில் வட்டி அறவிடப்படாத சலுகையுடன் 10 ஆண்டுகளுக்குள் கடனைத் திருப்பிச் செலுத்தும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நிதியுதவிகளுக்கு மேலதிகமாக, வீடமைப்பு உதவிகள், தையல் இயந்திரங்கள், மீன்பிடி வலைகள், துவிச்சக்கர வண்டிகள், நீர் இறைக்கும் இயந்திரங்கள், தச்சுத் தொழில் உபகரணங்கள், வெல்டிங் கருவிகள், விவசாய உபகரணங்கள் மற்றும் கால்நடை வளர்ப்புக்கான உதவிகளும் வழங்கப்பட்டதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், ஆரம்பகாலத்தில் சிறுவர்களாக இருந்த முன்னாள் உறுப்பினர்கள் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றுவதற்கான வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டதாகவும், அவர்களில் பலர் பரீட்சையில் சித்தியடைந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன், அவர்களுக்கு கல்வி மற்றும் தொழிற்பயிற்சி வசதிகளும் வழங்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது இவர்கள் பொதுச் சமூகத்தின் ஏனைய குடிமக்களைப் போன்று வாழ்ந்து வருவதாகத் தெரிவித்த அமைச்சர், அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் பல்வேறு கடன் மற்றும் சுயதொழில் ஊக்குவிப்புத் திட்டங்களைப் பயன்படுத்திக்கொள்வதற்கு இவர்களுக்கு எவ்வித தடையும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
அந்தத் திட்டங்களின் கீழ் தங்களுக்குத் தேவையான வசதிகளையும் உதவிகளையும் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகள் தற்போது திறந்துள்ளதாகவும் அமைச்சர் ஆனந்த விஜேபால மேலும் குறிப்பிட்டுள்ளார்.