ஐந்து மாதங்களாகக் காணாமல் போன 15 வயது சிறுமி; குகையில் இரண்டு மாதக் குழந்தையுடன் மீட்பு!
இலங்கையின் நக்கிள்ஸ் மலைத்தொடர் வனப்பகுதியில் உள்ள குகையொன்றில், கடந்த ஐந்து மாதங்களாகக் காணாமல் போயிருந்த 15 வயது சிறுமி ஒருவர் தனது இரண்டு மாத பெண் குழந்தையுடன் மீட்கப்பட்டுள்ளார்.
உடுதும்பர பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளைத் தொடர்ந்து, மீமுரே பகுதிக்கு அருகிலுள்ள வனப்பகுதியில் குறித்த சிறுமி கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
சிறுமி காணாமல் போனமை தொடர்பாக அவரது குடும்பத்தினர் சுமார் ஐந்து மாதங்களுக்கு முன்னர் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தனர். இதனையடுத்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.
விசாரணைகளின்போது, இளைஞர் ஒருவர் அப்பகுதியிலுள்ள கடையொன்றில் வழக்கத்திற்கு மாறாக அதிகளவு அரிசி மற்றும் உணவுப் பொருட்களைக் கொள்வனவு செய்து வந்தமை பொலிஸாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து, குறித்த இளைஞரைப் பின்தொடர்ந்த பொலிஸார், மக்கள் நடமாட்டமற்ற தொலைதூர வனப்பகுதிக்குள் சென்றுள்ளனர். அங்கு பிளாஸ்டிக் தாள்களால் மூடப்பட்டிருந்த குகையொன்றைக் கண்டுபிடித்துள்ளனர்.
அந்தக் குகைக்குள் காணாமல் போயிருந்த 15 வயது சிறுமியும் அவரது இரண்டு மாதப் பெண் குழந்தையும் இருந்துள்ளனர்.
விசாரணைகளின்படி, சிறுமி எவ்வித மருத்துவ உதவியுமின்றி அந்தக் குகையிலேயே குழந்தையைப் பிரசவித்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
குழந்தையின் தொப்புள் கொடியை அறுப்பதற்கு, கித்துல் தொழிற்துறையில் பயன்படுத்தப்படும் கூர்மையான கருவியொன்று பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், தாயும் குழந்தையும் வனப்பகுதியிலிருந்து சேகரிக்கப்பட்ட பாரம்பரிய மூலிகைகள் மூலம் பராமரிக்கப்பட்டு வந்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குழந்தையின் தந்தை எனச் சந்தேகிக்கப்படும் 23 வயதுடைய இளைஞர், கித்துல் பாணி தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்படும் பெரிய பாத்திரமொன்றைக் கொண்டு குழந்தையைக் குளிப்பாட்டியதாகவும் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பில் 23 வயதுடைய இளைஞரும் அவருக்கு உதவியதாகக் கூறப்படும் உறவினர் ஒருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் தெல்தெனிய நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, எதிர்வரும் நவம்பர் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், மீட்கப்பட்ட சிறுமியும் அவரது குழந்தையும் பொலிஸ் பாதுகாப்பில் அழைத்துச் செல்லப்பட்டு, மருத்துவப் பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை உடுதும்பர பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.