லாஃப்ஸ் எரிவாயு விலை அதிகரிப்பு: நாடாளுமன்றத்தில் கடும் வாக்குவாதம்
லாஃப்ஸ் (LAUGFS) நிறுவனத்தின் 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை திடீரென அதிகரிக்கப்பட்டமை தொடர்பில், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் சபாநாயகருக்கும் ஆளும் தரப்பு உறுப்பினர்களுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
எரிவாயு விலை அதிகரிப்பு தொடர்பான விடயத்தை அவசர விடயமாக எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர், நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 92(2)-இன் கீழ் ஒழுங்குப் பிரச்சினை (Point of Order) ஒன்றை முன்வைத்து உரையாற்ற முயன்றார்.
பொதுமக்கள் சார்பில் இந்த விடயத்தை எழுப்புவதற்குத் தனக்கு உரிமை இருப்பதாகவும், விலை அதிகரிப்பு தொடர்பில் அரசாங்கம் விளக்கமளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
எனினும், பொருளாதார ரீதியான விலை அதிகரிப்புகள் ஒழுங்குப் பிரச்சினையாகக் கருதப்பட முடியாது என சபாநாயகரும் ஆளும் தரப்பு உறுப்பினர்களும் தெரிவித்தனர்.
வாக்கெடுப்பு அல்லது பிரிவு வாக்கெடுப்பு போன்ற நாடாளுமன்ற நடவடிக்கைகளின்போது நடைமுறை விதிமுறைகள் மீறப்படுவது தொடர்பாகவே ஒழுங்குப் பிரச்சினைகளை முன்வைக்க முடியும் என்றும், பொதுவான மக்கள் பிரச்சினைகளை விவாதிப்பதற்கு அதனைப் பயன்படுத்த முடியாது என்றும் சபாநாயகர் சுட்டிக்காட்டினார்.
இதனைத் தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவர் தனது உரிய நேரத்தில் முன்வைக்க வேண்டிய நிலையியற் கட்டளை 27(2)-இன் கீழான கேள்வியை எழுப்புமாறும் அல்லது தனது ஆசனத்தில் அமருமாறும் சபாநாயகர் பலமுறை அறிவுறுத்தினார்.
எனினும், எரிவாயு விலை அதிகரிப்பு தொடர்பில் வெளிப்படைத்தன்மை அவசியம் என்றும், இதனால் பாதிக்கப்படும் பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்றும் சஜித் பிரேமதாச தொடர்ந்து வலியுறுத்தியதால் சபையில் நீண்ட நேரம் கடும் வாக்குவாதம் நிலவியது.