வெயிலில் உணவுப் பொருட்களை வைத்த கடை உரிமையாளருக்கு ரூ.41,000 அபராதம்!
கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியில் உணவுப் பொருட்கள் மற்றும் சிற்றுண்டிகளை நேரடி வெயிலில் சேமித்து வைத்திருந்த கடை உரிமையாளருக்கு 41,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
உணவுப் பாதுகாப்பு தொடர்பான எட்டு குற்றச்சாட்டுகளையும் கடை உரிமையாளர் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மாநகர சபையுடன் இணைந்து பணியாற்றும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் (PHI) மேற்கொண்ட உணவுப் பாதுகாப்பு சோதனையின்போதே இந்த விதிமீறல் கண்டறியப்பட்டுள்ளது.
இதன்போது, குறித்த கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பல்வேறு சிற்றுண்டிகள் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் நேரடி சூரிய ஒளி படும் வகையில் சேமித்து வைக்கப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.
இது உணவுச் சட்டம் மற்றும் அதனுடன் தொடர்புடைய விதிமுறைகளை மீறும் செயல் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, கடை உரிமையாளருக்கு எதிராக எட்டு குற்றச்சாட்டுகளின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன், அனைத்து குற்றச்சாட்டுகளையும் அவர் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து மொத்தமாக 41,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும், விதிமீறலுடன் தொடர்புடைய உணவுப் பொருட்களை அழிக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.