முச்சக்கர வண்டி திருட்டு: வாகன உதிரிப்பாகங்களுடன் இருவர் கைது!
முச்சக்கர வண்டி திருட்டு மற்றும் திருடப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் வாகன உதிரிப்பாகங்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் இருவர் வத்தளையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
25 மற்றும் 28 வயதுடைய இரு சந்தேகநபர்களும் நேற்று (20) பம்பலப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஒக்டோபர் 15ஆம் திகதி முச்சக்கர வண்டி ஒன்று திருடப்பட்டமை தொடர்பாகக் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளையடுத்தே இந்தக் கைதுகள் இடம்பெற்றுள்ளன.
இதன்போது, ஒரு சந்தேகநபர் முச்சக்கர வண்டி திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரிலும், மற்றையவர் திருடப்பட்ட சொத்துக்களை வைத்திருந்த குற்றச்சாட்டிலும் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர்களிடமிருந்து ஐந்து முச்சக்கர வண்டி இயந்திரங்கள், இரண்டு முச்சக்கர வண்டி சேஸிகள், ஒரு முச்சக்கர வண்டி, ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் பல வாகன இலக்கத் தகடுகள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட இருவரும் வத்தளைப் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பம்பலப்பிட்டி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.