மயிலத்தமடு – மாதவனை போராட்டம் 3 ஆண்டுகள்: தீர்வில்லை என்றால் சாகும் வரை உண்ணாவிரதம்!

arvloshan.com

மயிலத்தமடு – மாதவனை கால்நடைப் பண்ணையாளர்கள் தமது மேய்ச்சல் தரை உரிமையை வலியுறுத்தி முன்னெடுத்து வரும் அறவழிப் போராட்டம் மூன்று ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், தமக்கான நிரந்தரத் தீர்வு கிடைக்காவிட்டால் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாகப் பண்ணையாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரைப் பிரச்சினைக்குத் தீர்வு கோரி, சித்தாண்டி பிரதான வீதியில் பண்ணையாளர்கள் தொடர்ச்சியாக முன்னெடுத்து வரும் போராட்டத்தின் 1,095ஆவது நாளை முன்னிட்டு, இன்று (15) சித்தாண்டி சந்திக்கு அருகில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மேய்ச்சல் தரைக் காணிகள் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்படுவதாகவும், தமது கால்நடைகள் மீதான தாக்குதல்கள் தொடர்வதாகவும் தெரிவிக்கும் பண்ணையாளர்கள், தங்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் மேய்ச்சல் நில உரிமையை உறுதிப்படுத்தவும் நீண்டகாலமாகப் போராடி வருகின்றனர்.

போராட்டத்தின்போது, “மகாவலியே வெளியேறு”, “எமது நிலம் எமக்கு வேண்டும்”, “கால்நடைகளின் நிலத்தை அபகரிக்காதே”, “மேய்ச்சல் நில அபகரிப்பைத் தடுத்து நிறுத்து”, “தமிழருக்கு ஒரு சட்டம், சிங்களவருக்கு ஒரு சட்டமா? சட்டத்தைச் சமமாக அமுல்படுத்து” மற்றும் “ஜனாதிபதியின் வாக்குறுதிகளை நிறைவேற்றாதது ஏன்?” உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு பண்ணையாளர்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

மேலும், தமது வாடிகள் எரிக்கப்படுவதாகக் கூறப்படும் சம்பவங்களை அடையாளப்படுத்தும் வகையில், குடிசை ஒன்றுக்குத் தீ மூட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் 1,095 நாளைக் குறிக்கும் வகையில் அமைக்கப்பட்ட தீப்பந்தத்தையும் ஏற்றி தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதன்போது, பண்ணையாளர் ஒருவர் தலையில் பாலை ஊற்றியும் போராட்டத்தில் ஈடுபட்டார்.

ஜனாதிபதியின் வாக்குறுதிகள் நடைமுறைப்படுத்தப்படவில்லை எனக் குற்றச்சாட்டு

மயிலத்தமடு – மாதவனை பண்ணையாளர்களின் அறவழிப் போராட்டம் நான்காவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள போதிலும், இதுவரை தமக்கான நிரந்தரத் தீர்வு வழங்கப்படவில்லை எனப் பண்ணையாளர்கள் கவலை தெரிவித்தனர்.

கடந்த மே மாதம் ஜனாதிபதி மட்டக்களப்புக்கு விஜயம் செய்தபோது வழங்கிய வாக்குறுதிகளும் பிறப்பித்த உத்தரவுகளும் இதுவரை உரிய அதிகாரிகளால் நடைமுறைப்படுத்தப்படவில்லை எனவும், இந்த விவகாரம் தொடர்ந்து இழுத்தடிக்கப்படுவதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டினர்.

கடந்த 12 மற்றும் 13ஆம் திகதிகளில் மேய்ச்சல் நிலங்கள் சட்டவிரோதமாக உழவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பண்ணையாளர்கள், இதனால் கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலம் குறைந்து வருவதுடன், போதிய உணவின்றி மாடுகள் உயிரிழக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டனர்.

10க்கும் மேற்பட்ட கால்நடைகள் சுட்டுக் கொலை?

பண்ணையாளர்களின் வாடிப் பகுதிகளில் சட்டவிரோதத் துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்கள் பயன்படுத்தப்படுவதாகவும், அண்மையில் 10க்கும் மேற்பட்ட கால்நடைகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாகவும் பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவங்கள் தொடர்பாகப் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்தும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என அவர்கள் குற்றஞ்சாட்டினர்.

மேலும், தமிழ் மக்கள் மற்றும் கால்நடைப் பண்ணையாளர்கள் சிறிய தவறுகளைச் செய்தாலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் உடனடியாகக் கைது செய்யப்படும் நிலையில், மேய்ச்சல் நிலங்களைச் சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பதாகக் கூறப்படுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை எனவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

சட்டம் அனைவருக்கும் சமமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும், தமது வாழ்வாதாரத்தையும் கால்நடைகளையும் பாதுகாக்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பண்ணையாளர்கள் வலியுறுத்தினர்.

ஐந்து நாட்களுக்குள் தீர்வு வழங்காவிட்டால் உண்ணாவிரதம்

ஜனாதிபதியின் வாக்குறுதிகளுக்கு அமைய, அடுத்த ஐந்து நாட்களுக்குள் சட்டவிரோத ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றி, தமது வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், தற்போதைய அறவழிப் போராட்டத்தைச் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டமாக மாற்றப்போவதாகப் பண்ணையாளர்கள் பகிரங்கமாக எச்சரித்தனர்.

தமது கால்நடைகளும் வாழ்வாதாரமும் முற்றாக அழிந்துபோனால், பண்ணையாளர்கள் வீதியில் இறங்கிப் பிச்சை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள் எனவும், இதற்கான பொறுப்பை அரசாங்கமும் மகாவலி அதிகார சபையும் ஏற்க வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

இந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா. சிறிநேசன், வைத்தியர் இ. சிறிநாத், சிவில் சமூகச் செயற்பாட்டாளர் எஸ். சிவயோகநாதன், அருட்தந்தை லுக்காஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

போராட்டம் நடைபெற்ற பகுதியில் பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்ததுடன், பெருமளவிலான புலனாய்வுப் பிரிவினரும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.


ஏனைய செய்திகள்

arvoshan.com

மயிலத்தமடு – மாதவனை பிரச்சினையை இனவாத முரண்பாடாகத் திரிபுபடுத்த வேண்டாம்! – சாணக்கியன்

...

arvoshan.com

சாமர சம்பத் தசநாயக்கவுக்கு நான்கு இலஞ்ச வழக்குகளில் பிணை – மற்றொரு வழக்கில் நவம்பர் 6 வரை விளக்கமறியல்!

...

arvoshan.com

விஹாரமஹாதேவி பூங்காவில் பிக்குகளின் சத்தியாக்கிரகப் போராட்டம்: நீதிமன்ற உத்தரவைத் திருத்தக் கோரிய மனு நிராகரிப்பு!

...

arvoshan.com

ஹுலங்கமுவ, ரணிலின் பொருளாதார ஆலோசகர் அல்ல! – ஹர்ஷாவின் கூற்றுக்கு ரணில் அலுவலகம் மறுப்பு

...

arvoshan.com

வாப்போயா தினத்தை முன்னிட்டு வங்கியின் பெயரில் போலி பரிசுச் செய்தி – பொதுமக்களுக்கு SLCERT எச்சரிக்கை!

...

arvoshan.com

சம்மாந்துறையில் மயங்கி விழுந்த காட்டு யானைக்கு தீவிர சிகிச்சை!

...

arvoshan.com

சபரகமுவ பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக பேராசிரியர் கலெல்லே சுமனசிறி தேரர் நியமனம்!

...

arvoshan.com

லிட்ரோ எரிவாயு: அடுத்த மூன்று நாட்களில் 350,000 சிலிண்டர்களை விநியோகிக்கத் திட்டம்

...

arvoshan.com

விளக்கமறியலில் உள்ள மகன் நாமல் ராஜபக்ஷவுக்கு உருக்கமான கடிதம் எழுதிய மஹிந்த

...

arvoshan.com

கொழும்பில் காசநோய் பரவுவதற்கு அதிக மக்கள் அடர்த்தியே முக்கிய காரணம் – சுகாதார அமைச்சர்

...

arvoshan.com

LankaQR பயனர்களுக்கு ரூ. 5.1 கோடி பரிசு; ஒக்டோபர் 27 முதல் அதிர்ஷ்டக் குலுக்கல்!

...

arvoshan.com

தாய், மகனை சட்டவிரோதமாகத் தடுத்து துன்புறுத்தியதாகக் குற்றச்சாட்டு: தேசிய மக்கள் சக்தி பிரதேச சபைத் தலைவர் உள்ளிட்ட ஐவருக்குப் பிணை

...

arvoshan.com

வெறிநாய்த் தடுப்பு மற்றும் நாய்களைப் பதிவு செய்யும் சட்டமூலத்திற்கு நாடாளுமன்றக் குழு அனுமதி!

...

arvoshan.com

ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு முதலாவது இதய அறுவைச் சிகிச்சை வெற்றி!

...

arvoshan.com

பாஸ்பேட் இறக்குமதி இலஞ்ச விவகாரம்: நாடாளுமன்ற உறுப்பினர் சமர சம்பத் மீண்டும் விளக்கமறியலில்!

...