மத்திய கிழக்கிலிருந்து எண்ணெய் விநியோகம் அதிகரிப்பு: மூன்று மாதங்களில் இல்லாத அளவுக்கு மசகு எண்ணெய் விலை வீழ்ச்சி
உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை திங்கட்கிழமை (23) மூன்று மாதங்களில் இல்லாத மிகக் குறைந்த மட்டத்திற்குச் சரிந்துள்ளது.
மத்திய கிழக்கிலிருந்து எண்ணெய் விநியோகம் அதிகரித்துள்ளதுடன், லிபியாவின் முக்கிய எண்ணெய்க் குழாய் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளமையும் இந்த விலை வீழ்ச்சிக்குக் காரணமாக அமைந்துள்ளது.
இதன்படி, பிரென்ட் (Brent) ரக மசகு எண்ணெயின் விலை பீப்பாய் ஒன்றுக்கு 3.20 அமெரிக்க டொலர்களால் (3.46%) குறைந்து 89.37 டொலராகப் பதிவானது.
அதேவேளை, அமெரிக்காவின் வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் (WTI) ரக மசகு எண்ணெயின் விலை 3.24 டொலர்களால் (3.88%) வீழ்ச்சியடைந்து பீப்பாய் ஒன்றுக்கு 80.17 டொலராகப் பதிவானது.
**மீண்டும் திறக்கப்பட்ட லிபிய எண்ணெய்க் குழாய்**
லிபியாவின் ஷராரா (Sharara) எண்ணெய்க் குழாய் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதுடன், அதனூடாக பெறப்படும் மசகு எண்ணெய் ஸாவியா (Zawiya) பகுதியில் அமைந்துள்ள அகாகஸ் (Akakus) நிறுவனத்தின் சேமிப்புத் தொட்டிகளுக்குச் செல்லத் தொடங்கியுள்ளதாக அந்நாட்டின் தேசிய எண்ணெய் கூட்டுத்தாபனத் தலைவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், 2027ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மசகு எண்ணெயின் விலை 70 அமெரிக்க டொலர் மட்டத்திற்குக் குறையக்கூடும் என ஜே.பி. மோர்கன் (JPMorgan) எதிர்வுகூறியுள்ளது.
உலகளாவிய ரீதியில் எண்ணெய் விநியோகம் தேவையை விட அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதே இதற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஈரானைத் தவிர்ந்த மத்திய கிழக்கு நாடுகளின் உற்பத்தி அதிகரிப்பதுடன், அமெரிக்கா தலைமையிலான அமெரிக்கக் கண்ட நாடுகளிலிருந்தும் விநியோகம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும், உலகளாவிய எண்ணெய் விலையைத் தீர்மானிப்பதில் புவிசார் அரசியல் நிலைமைகள் தொடர்ந்து முக்கிய பங்கு வகிக்கும் என பாங்க் ஒஃப் அமெரிக்கா (Bank of America) தெரிவித்துள்ளது.
உலகளாவிய எண்ணெய் கையிருப்பு ஒப்பீட்டளவில் குறைவாக இருப்பதால், விநியோகத்தில் ஏற்படும் தடைகள் பல நாடுகளைப் பாதிக்கக்கூடும் என்றும் அந்த வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
இதனிடையே, எண்ணெய் விநியோகம் அதிகரித்து வருவதற்கான அறிகுறிகள் தென்படுவதுடன், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் தாக்குதல் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் நாளுக்கு நாள் குறைந்து வருவதாகவும் IG நிறுவனத்தின் தலைமை சந்தை ஆய்வாளர் கிறிஸ் பியூச்சாம்ப் தெரிவித்துள்ளார்.