புதுக்கோட்டையில் 13,676 பேருக்கு ரூ.62.73 கோடி நலத்திட்ட உதவிகள் – முதல்வர் விஜய் வழங்கினார்

arvloshan.com

தமிழகத்தின் புதுக்கோட்டையில் நடைபெற்ற அரசு விழாவில், 13,676 பயனாளிகளுக்கு சுமார் 62.73 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதல்வர் விஜய் வழங்கினார்.

இதன்போது, புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்திப் பணிகளையும் அவர் திறந்து வைத்ததுடன், புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (02) நடைபெற்ற அரசு விழாவில் கலந்துகொள்வதற்காக, திருச்சி விமான நிலையத்திலிருந்து சாலை மார்க்கமாக முதல்வர் விஜய் புதுக்கோட்டைக்கு வருகை தந்தார்.

கட்டியாவயல் பகுதியில் இருந்து ரோடு ஷோ மூலம் ஆட்சியர் அலுவலகத்தைச் சென்றடைந்த அவர், அங்கு நடைபெற்ற அரசு விழாவில் 68.31 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட உள்விளையாட்டு அரங்கம் உள்ளிட்ட 44 முடிவுற்ற திட்டங்களைத் திறந்து வைத்தார்.

மேலும், 11.72 கோடி ரூபாய் மதிப்பிலான 70 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியதுடன், 13,676 பயனாளிகளுக்கு 62.73 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் பணியையும் ஆரம்பித்து வைத்தார்.

இதன்போது, மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர், பெண் ஒருவருடன் செல்ஃபியும் எடுத்துக்கொண்டார். தொடர்ந்து, ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திரண்டிருந்த அரச ஊழியர்களை நோக்கிக் கையசைத்து வரவேற்பையும் பெற்றுக்கொண்டார்.

இதனையடுத்து, ரோடு ஷோ மூலம் புதிய பேருந்து நிலையத்துக்குச் சென்ற முதல்வர், 23.25 கோடி ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட புதிய பேருந்து நிலையத்தைத் திறந்து வைத்து பார்வையிட்டார்.

பின்னர் விருந்தினர் மாளிகைக்குச் சென்று ஓய்வெடுத்த அவர், பிற்பகல் 3 மணியளவில் மீண்டும் திருச்சி விமான நிலையத்துக்குச் சென்று, அங்கிருந்து தனி விமானம் மூலம் சென்னைக்குப் புறப்பட்டுச் சென்றார்.

இந்த நிகழ்வில், மாநில நீர்வளத்துறை அமைச்சர் என். ஆனந்த், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ஜெ. முகமது பர்வேஸ், நாடாளுமன்ற உறுப்பினர்களான துரை வைகோ, நவாஸ்கனி, ஜோதிமணி, சட்டமன்ற உறுப்பினர் என். சுப்பிரமணியன் மற்றும் மாவட்ட ஆட்சியர் எம். அருணா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

முதல்வருக்கு தவெகவினர் உற்சாக வரவேற்பு

முதல்வர் விஜய் திருச்சி விமான நிலையத்திலிருந்து திருச்சி – காரைக்குடி தேசிய நெடுஞ்சாலை வழியாக புதுக்கோட்டைக்கு வந்தபோது, பல்வேறு இடங்களில் தமிழக வெற்றிக் கழகத்தினர் உற்சாக வரவேற்பளித்தனர்.

வெயிலில் காத்திருந்த மூவர் மயக்கம்

புதிய பேருந்து நிலையம் அருகே முதல்வரை வரவேற்பதற்காக வெயிலில் நீண்ட நேரம் காத்திருந்த மூவர் அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர். அவர்களைப் பொலிஸார் மீட்டு நிழலான இடத்தில் அமர வைத்தனர். மேலும், அங்கு காத்திருந்த பொதுமக்களுக்கு குடிநீரும் வழங்கப்பட்டது.

கருப்புக்கொடி போராட்டத்துக்குத் திட்டமிட்ட தேமுதிகவினர் தடுத்து வைப்பு

விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தத் தவறியதாகக் கூறி, முதல்வர் விஜய்க்குக் கருப்புக்கொடி காட்டத் திட்டமிட்டிருந்த தேமுதிக மாவட்டச் செயலாளர் கார்த்திகேயன் மற்றும் மாநகரச் செயலாளர் பரமஜோதி ஆகியோரைப் பொலிஸார் கட்சி அலுவலகத்திலேயே தடுத்து வைத்தனர்.

அதேவேளை, முதல்வரிடம் கோரிக்கை மனு வழங்குவதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்திருந்த புதுக்கோட்டை தொகுதி தவெக வேட்பாளராகப் போட்டியிட்ட கே.எம். சரீப்பையும் பொலிஸார் தடுத்து நிறுத்தினர்.

கடைசி நேரத்தில் விழா இடம் மாற்றம்

புதுக்கோட்டை பேருந்து நிலையம் அருகிலுள்ள ஆயுதப்படை மைதானத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவை நடத்துவதற்கு ஆரம்பத்தில் திட்டமிடப்பட்டிருந்தது.

இதற்காகப் பிரம்மாண்டமான பந்தல் அமைக்கப்பட்டு, சுமார் 2,000 பேர் அமரக்கூடிய வகையில் ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டன.

எனினும், பாதுகாப்புக் காரணங்களைக் கருத்திற்கொண்டு அங்கு விழாவை நடத்த வேண்டாம் என உளவுத்துறையினர் அறிவுறுத்தியதைத் தொடர்ந்து, கடைசி நேரத்தில் விழா மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்குக்கு மாற்றப்பட்டது.

பேருந்து நிலைய மாற்றத்தால் பொதுமக்கள் அவதி

புதிய பேருந்து நிலையத்தின் கட்டுமானப் பணிகள் நடைபெற்ற காலத்தில் தற்காலிக பேருந்து நிலையம் ஒன்று இயங்கி வந்தது. இந்நிலையில், புதிய பேருந்து நிலையத் திறப்பு விழாவுக்கான முன்னேற்பாடுகளைக் கருத்திற்கொண்டு தற்காலிக பேருந்து நிலையமும் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டது.

எனினும், இந்த மாற்றம் தொடர்பாக மாவட்ட நிர்வாகம் உரிய முன்னறிவிப்பை வழங்காததுடன், புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்ட பின்னரும் அங்கிருந்து பேருந்துச் சேவைகள் ஆரம்பிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதனால், பாடசாலை மற்றும் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் போக்குவரத்து வசதிகளைப் பெற்றுக்கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர்.

மக்கள் குறைதீர் கூட்டம் தொடர்பிலும் குழப்பம்

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழமையாக நடைபெறும் மக்கள் குறைதீர் கூட்டம் அன்றைய தினம் நடைபெறுமா என்பது குறித்து முன்கூட்டியே அறிவிக்கப்படவில்லை. இதனால், கூட்டம் நடைபெறுமா இல்லையா என்ற குழப்பம் சமூக வலைத்தளங்களில் பரவியது.

இதனைத் தொடர்ந்து, ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள ஓர் அறையில் குறைதீர் கூட்டத்துக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதிகாரிகள் அங்கு அமர்ந்திருந்த போதிலும், பொலிஸாரின் கட்டுப்பாடுகள் காரணமாகக் கோரிக்கைகளை முன்வைக்க வந்த பொதுமக்கள் பலர் திரும்பிச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.


ஏனைய செய்திகள்

arvoshan.com

உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாக இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சாதனை!

...

arvoshan.com

கல்லறை திருநாள்: தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி; கல்லறைகளில் மலர் தூவி உறவினர்கள் அஞ்சலி

...

arvoshan.com

தமிழகத்துக்கு வரவேண்டிய ரூ.1,614 கோடி கொரிய முதலீடுகள் ஆந்திராவுக்குச் சென்றுவிட்டன – ஸ்டாலின் குற்றச்சாட்டு

...

arvoshan.com

அம்பாசமுத்திரத்தில் நவம்பர் 14-ல் முதல்வர் விஜய் பங்கேற்கும் நிகழ்ச்சி? இடைத்தேர்தலுக்கு தயாராகும் தவெக!

...

arvoshan.com

தமிழக அரசின் நிர்வாகத் தோல்வியால் கைதிகள் சிறையிலிருந்து தப்பும் நிலை – உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்

...

arvoshan.com

மனிதநேயத்தை மூச்சாகக் கொண்டு வாழ்ந்த தேவரின் லட்சியப் பாதையில் தொடர்ந்து பயணிப்போம் – முதல்வர் விஜய்

...

arvoshan.com

அரசுப் பணிகளுக்கான வயது உச்சவரம்பு 5 ஆண்டுகள் அதிகரிப்பு – முதல்வர் விஜய் உத்தரவு

...

arvoshan.com

விளையாட்டுப் பொருட்கள் உற்பத்தியை மேம்படுத்த இந்தியா ரூ.18.56 பில்லியன் ஒதுக்கீடு!

...

arvoshan.com

தமிழ்நாடு சிறையில் வலிப்பு வந்ததாக நாடகமாடி சிறையிலிருந்து தப்பிய 17 கைதிகள்!

...

arvoshan.com

சபரிமலை மண்டல கால தரிசனத்திற்கு இணையவழி முன்பதிவு ஆரம்பம்!

...

arvoshan.com

பசுவதை வழக்கில் மூவருக்கு ஆயுள் தண்டனை – வேதங்கள், மனுஸ்மிருதியை மேற்கோள் காட்டிய நீதிமன்றம்

...

arvoshan.com

மியான்மர் ஆயுதப் பயிற்சி வழக்கு: வான்டைக் உள்ளிட்ட 7 பேருக்கு வெளிநாட்டில் தங்க அனுமதி நீடிப்பு

...

arvoshan.com

இந்தியாவில் உலகின் மிகப்பெரிய பசுமை அமோனியா உற்பத்தி நிலையங்களில் ஒன்றாக உருவாகும் புதிய திட்டம்!

...

arvoshan.com

நிர்வாகிகள் கைது: தவெக அரசைக் கண்டித்து அக். 24-ல் நாதக மாநிலம் தழுவிய போராட்டம்!

...

arvoshan.com

ஒரு மில்லியன் பின்தொடர்பாளர்களைக் கொண்ட இந்திய நிதி ஆலோசகர் உயிரிழப்பு! இணையத் துன்புறுத்தல் குறித்து விசாரணை

...