பாஸ்பேட் இறக்குமதி இலஞ்ச விவகாரம்: நாடாளுமன்ற உறுப்பினர் சமர சம்பத் மீண்டும் விளக்கமறியலில்!
பாஸ்பேட் இறக்குமதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்காக மூன்று நிறுவனங்களிடமிருந்து 84 இலட்சம் ரூபா இலஞ்சம் கோரிப் பெற்றதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பில், பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான சமர சம்பத் தசநாயக்க எதிர்வரும் நவம்பர் 6ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் இன்று (23) இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் சமர்ப்பிப்புகளைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அவரது முன்னாள் பிரத்தியேக செயலாளரையும் எதிர்வரும் நவம்பர் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சமர சம்பத் தசநாயக்க, 2022 செப்டெம்பர் 8ஆம் திகதி முதல் 2024 செப்டெம்பர் 23ஆம் திகதி வரை ஆரம்பக் கைத்தொழில்கள் இராஜாங்க அமைச்சராகப் பதவி வகித்த காலப்பகுதியில், உரிய நடைமுறைகளைப் பின்பற்றாமல் மூன்று நிறுவனங்களுக்கு பாஸ்பேட் இறக்குமதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்காக இலஞ்சம் பெற்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.
இந்த வழக்கில் அவர் மூன்றாவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ளதாகவும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதால், சந்தேகநபர்களை மேலும் விளக்கமறியலில் வைக்குமாறு ஆணைக்குழு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்திருந்தது.