நாடு முழுவதும் 35,000 முன்பள்ளி ஆசிரியர்களுக்கு இலவசப் பயிற்சி வழங்க அரசாங்கம் நடவடிக்கை!
இலங்கையின் முன்பிள்ளைப் பருவக் கல்வித்துறையை மேம்படுத்தும் நோக்கில், நாடளாவிய ரீதியில் உள்ள 35,000 முன்பள்ளி ஆசிரியர்களுக்கும் இலவசமாகப் பயிற்சியளிக்கும் தேசிய வேலைத்திட்டத்தை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.
இது தொடர்பில் விசேட அறிக்கையொன்றை வெளியிட்ட மகளிர் மற்றும் சிறுவர் விவகார பிரதி அமைச்சர் வைத்தியர் நாமல் சுதர்ஷன, நாட்டின் அனைத்து முன்பள்ளி ஆசிரியர்களையும் உள்ளடக்கிய வகையில் இந்த விரிவான பயிற்சித் திட்டம் முன்னெடுக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு, மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு, முன்பிள்ளைப் பருவ அபிவிருத்திக்கான தேசிய செயலகம் மற்றும் தேசிய கல்வி நிறுவகம் ஆகியன இணைந்து இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றன.
இதன் ஊடாக தேசிய முன்பள்ளிக் கொள்கையை நடைமுறைப்படுத்துதல், முன்பள்ளிகளைப் பதிவு செய்தல், ஒழுங்கமைக்கப்பட்ட பாடத்திட்டக் கட்டமைப்பை அறிமுகப்படுத்துதல் மற்றும் ஆசிரியர்களின் தொழில்சார் திறன்களை மேம்படுத்துதல் ஆகியவை இலக்காகக் கொள்ளப்பட்டுள்ளன.
பல கட்டங்களாக முன்னெடுக்கப்படும் இப்பயிற்சித் திட்டத்திற்காக 108 தேசிய மட்ட பிரதான பயிற்றுவிப்பாளர்களும், 556 மாகாண மட்ட பயிற்றுவிப்பாளர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதன்படி, ஒவ்வொரு ஆசிரியருக்கும் தலா 10 நாட்கள் பயிற்சி வழங்கப்படவுள்ளதுடன், நாடளாவிய ரீதியில் சுமார் 35,000 முன்பள்ளி ஆசிரியர்கள் இதன் மூலம் பயனடையவுள்ளனர்.
மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களின் ஒருங்கிணைப்புடன் முன்னெடுக்கப்படும் இத்திட்டம், ஏற்கனவே எட்டு மாகாணங்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சபரகமுவ மாகாணத்தில் எதிர்வரும் நவம்பர் 11ஆம் திகதி இப்பயிற்சித் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும், விசேட தேவையுடைய சிறுவர்களின் கல்வித் தேவைகள் மற்றும் அவர்களுக்கான வசதிகளை மேம்படுத்துவதற்கான விசேட ஏற்பாடுகளும் தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.