கொத்மலை வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவை மேம்படுத்த ரூ.420 மில்லியன் வழங்கிய டயலொக்
டித்வா புயலால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை மீளக் கட்டியெழுப்பும் பணிகளின் ஒரு பகுதியாக, கொத்மலை ஆதார வைத்தியசாலையின் நவீனமயப்படுத்தப்பட்ட அவசர சிகிச்சைப் பிரிவு இன்று (05) பொதுமக்களின் பயன்பாட்டுக்காகத் திறந்து வைக்கப்பட்டது.
இந்தத் திட்டத்திற்காக டயலொக் ஆசியாட்டா நிறுவனம் 420 மில்லியன் ரூபாவை நிதியுதவியாக வழங்கியுள்ளது.
குறித்த நிதியுதவியின் மூலம் வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவு முழுமையாகப் புனரமைக்கப்பட்டதுடன், நவீன மருத்துவத் தொழில்நுட்ப உபகரணங்களும் பொருத்தப்பட்டுள்ளன.
இதன் மூலம் கொத்மலை மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளைச் சேர்ந்த மக்கள் அவசர மருத்துவத் தேவைகளின்போது விரைவானதும் தரமானதுமான சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் மக்களுக்குத் தரமான மருத்துவ சேவைகளை வழங்கும் அரசாங்கத்தின் நோக்கத்தை வலுப்படுத்தும் வகையில் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. உயிருக்கு ஆபத்தான அவசர நிலைகளில் மக்களின் உயிரைக் காப்பதற்கு கிராமப்புற மற்றும் நகர்ப்புற வைத்தியசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் இந்த முயற்சி எடுத்துக்காட்டுகிறது.
அரசாங்கத்திற்கும் டயலொக் நிறுவனத்திற்கும் இடையிலான இந்தக் கூட்டுச் செயற்பாட்டின் தொடர்ச்சியாக, அண்மையில் சிலாபம் மாவட்ட வைத்தியசாலையில் நவீன வசதிகளுடன் கூடிய சத்திரசிகிச்சைப் பிரிவு மற்றும் எண்டோஸ்கோபி பிரிவு ஆகியனவும் திறந்து வைக்கப்பட்டிருந்தன.
கொத்மலை ஆதார வைத்தியசாலையில் நடைபெற்ற திறப்பு விழாவில், வைத்தியசாலையின் மருத்துவ அத்தியட்சகர் டாக்டர் ஹிமேஷ் வீரதுங்க, டயலொக் ஆசியாட்டா குழுமத்தின் பிரதம சந்தைப்படுத்தல் அதிகாரி லசந்த தெவரப்பெரும, குழுமத்தின் பிரதம அதிகாரி அசங்க பிரியதர்ஷன உள்ளிட்ட அரச பிரதிநிதிகள், சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் வைத்தியசாலை ஊழியர்கள் கலந்துகொண்டனர்.