வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி மோசடி – 12 பிடியாணைகளுடன் பெண் கைது!
வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்புப் பெற்றுத் தருவதாகக் கூறி பலரிடம் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு, 12 பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டிருந்த 40 வயதுடைய பெண்ணொருவர் ராகம பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
காவல்துறை ஊடகப் பிரிவு வெளியிட்ட தகவலின்படி, கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய, புதன்கிழமை (04) இரவு ராகம காவல்துறையினர் கிங்கெந்த பகுதியில் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின்போதே குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
ராகம பகுதியைச் சேர்ந்த சந்தேகநபரான பெண், வெளிநாடுகளுக்குச் செல்வதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதாகக் கூறி பல்வேறு நபர்களிடம் பணம் பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், நீதிமன்ற விசாரணைகளுக்குத் தொடர்ச்சியாக முன்னிலையாகாமல் தலைமறைவாக இருந்த குறித்த பெண்ணுக்கு எதிராக வெலிசறை நீதவான் நீதிமன்றத்தினால் 12 பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டிருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று (05) வெலிசறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ராகம காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.