ரகித ராஜபக்ஷவின் வங்கிக் கணக்குகள், சொத்துகளை மூன்று மாதங்களுக்கு முடக்க நீதிமன்றம் உத்தரவு
முன்னாள் அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவின் மகனும் சட்டத்தரணியுமான ரகித ராஜபக்ஷவுக்குச் சொந்தமான நான்கு வங்கிக் கணக்குகள் மற்றும் இரண்டு சொகுசு வாகனங்களை மூன்று மாத காலத்திற்கு முடக்கி வைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (05) உத்தரவிட்டுள்ளது.
இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் (CIABOC) ஏற்கனவே முடக்கப்பட்டிருந்த குறித்த சொத்துக்கள் தொடர்பில் முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களைப் பரிசீலித்த பின்னர் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
குற்றம் மூலம் ஈட்டப்பட்ட சொத்துக்கள் தொடர்பான சட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் விசாரணையின் ஒரு பகுதியாக, சுமார் 40 மில்லியன் ரூபா வைப்பிலிடப்பட்டிருந்த நான்கு வங்கிக் கணக்குகளும், இரண்டு சொகுசு வாகனங்களும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் முன்னதாக முடக்கப்பட்டிருந்தன.
பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான ஹரக் கட்டாவின் மனைவியிடமிருந்து 120 மில்லியன் ரூபா இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பிலேயே இந்த விசாரணை முன்னெடுக்கப்படுகிறது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த ஹரக் கட்டாவை அங்கிருந்து விடுவித்து, பாதுகாப்பான சிறைச்சாலைக்கு மாற்றுவதற்கு ஏற்பாடு செய்வதாகக் கூறி, ரகித ராஜபக்ஷ, சரித் அபேசிங்க உள்ளிட்ட மூவர் இந்தப் பணத்தைப் பெற்றதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேகநபர்களும் முன்னதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். பின்னர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
குற்றம் சாட்டப்பட்டுள்ள 120 மில்லியன் ரூபா இலஞ்சப் பணம் இதுவரை மீட்கப்படாத நிலையில், குறித்த சந்தேகநபர்களின் சொத்துக்கள் தொடர்பில் குற்றத்தின் மூலம் ஈட்டப்பட்ட சொத்துக்கள் தொடர்பான சட்டத்தின் கீழ் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.