நயினாதீவில் வேகமாகப் பரவும் மர்மத் தாவரம் – கட்டுப்படுத்துவது அவசியம் என எச்சரிக்கை!
நயினாதீவில் ஆலங்குளத்தை அண்டிய பகுதிகள் உள்ளிட்ட பல இடங்களில் வேகமாகப் பரவி வரும் இனங்காணப்படாத தாவரம், விவசாய நிலங்களையும் ஏனைய தாவரங்கள் வளரும் பகுதிகளையும் ஆக்கிரமிக்கும் அபாயம் உள்ளதாகத் திருநெல்வேலி விவசாய ஆராய்ச்சி நிலையம் எச்சரித்துள்ளது.
குறித்த தாவரம் மண்ணின் வளத்தை மேம்படுத்தும் பல நன்மைகளைக் கொண்டிருந்தாலும், கட்டுப்பாடின்றிப் பரவினால் விவசாய நடவடிக்கைகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என ஆராய்ச்சி நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.
இத்தாவரத்தின் சாதக, பாதகங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிக்கையின்படி, இத்தாவரத்தின் சிறிய விதைகள் காற்று, நீர் மற்றும் விலங்குகள் ஊடாக இலகுவாகப் பரவக்கூடிய தன்மையைக் கொண்டுள்ளன. குறிப்பாக, விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாத கைவிடப்பட்ட நிலங்களில் இவை அடர்த்தியான புதர்களாக வளரக்கூடும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளை, மண் அரிப்பைக் குறைத்தல், மண்ணின் கட்டமைப்பை மேம்படுத்துதல், மண்ணில் ஈரப்பதத்தைத் தக்கவைத்தல் மற்றும் ஆழமான மண் அடுக்குகளிலுள்ள ஊட்டச்சத்துகளை மேல் மண்ணுக்குக் கொண்டுவருதல் உள்ளிட்ட நன்மைகளும் இத்தாவரத்துக்கு இருப்பதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இத்தாவரத்தின் மண்வளத்தை மேம்படுத்தும் பண்புகளை விவசாயத்துக்குச் சாதகமாகப் பயன்படுத்துவதுடன், அதன் கட்டுப்பாடற்ற பரவலைத் தடுப்பதற்கும் உரிய மேலாண்மை நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியது அவசியம் எனத் திருநெல்வேலி விவசாய ஆராய்ச்சி நிலையம் வலியுறுத்தியுள்ளது.